தேவையானவை:
துவரம்பருப்பு – கால் கப்,
கத்தரி வத்தல் – 10,
சின்ன வெங்காயம் – ஒரு கப்,
தக்காளி – 2,
பழைய புளி – எலுமிச்சம்பழ அளவு,
மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்,
தனியாதூள் – 2டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு – அரைடீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – கால் கப்,
கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை:
துவரம்பருப்பை குழையாமல் நெத்துப் பருப்பாக (அழுத்தினால் அமுங்க வேண்டும்) வேகவைத்துக்கொள்ளுங்கள். புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். கத்தரிவத்தலை, அரை கப் கொதிக்கும் நீரில் ஊறவையுங்கள். வெங்காயத்தை தோலுரித்து இரண்டாகநறுக்கிக் கொள்ளுங்கள். தக்காளியையும் பொடியாக நறுக்குங்கள்.எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து வெங்காயத்தையும் போட்டு நன்குவதக்கி, புளித்தண்ணீரை சேருங்கள். அத்துடன் மிளகாய்தூள், தனியாதூள், மஞ்சள்தூள், உப்புசேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிடுங்கள்.
பிறகு, கத்தரி வத்தலைச் சேர்த்து, மேலும் 5நிமிடம் கொதிக்கவிட்டு, வேகவைத்த பருப்பை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்குங்கள். இட்லிக்கும், சாதத்துக்கும் ஏற்ற சுவையான குழம்பு.
குறிப்பு: கத்தரி வத்தல் இப்போது கடைகளிலேயே கிடைக்கிறது. அல்லது, கத்தரி சீஸனில், காயைவாங்கி, நீளமாக நறுக்கி, உப்புப் போட்டு வேகவைத்து, வெயிலில் நன்கு காயவைத்தும் உபயோகிக்கலாம்.
நன்றி-தினகரன்