தேவையான பொருட்கள்:
பொரி – 1 1/2 கப்
கட்டி வெல்லம் துருவியது – 1/4 கப் (கோபுரமாக )
ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
தண்ணீர் – 2 மேஜைக்கரண்டி
செய்முறை :
ஒரு வடசட்டியில் துருவிய வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வெல்லம் கரையும் வரை விடவும். கரைந்தவுடன் அதில் உள்ள தூசிகள் நீக்குவதற்கு வடிகட்டிக் கொள்ளவும். பின் மறுபடியும் வடிகட்டிய வெல்ல பாகை வடசட்டியில் வைத்து மிதமான சூட்டில் நன்றாக காய்ச்சவும்.
உருண்டைப் பதம் வரும் வரை இடை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். சில நிமிடங்களில் சற்று கெட்டியாக ஆரம்பிக்கும். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் வைத்துக் கொள்ளவும். தண்ணீரில் சிறிதளவு பாகை ஊற்றினால் கரையாமல் இருந்து அதை ஒன்று திரட்டி சிறு உருண்டை செய்ய முடிந்தால் அது தான் உருண்டை பதம்.
உருண்டை பதம் வந்ததும் உடனே தாமதிக்காமல் அடுப்பை அணைத்து அதில் பொரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி சூடு சற்று ஆறியதும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக கைகளை அழுத்தி உருண்டைகள் பிடிக்கவும்.
சுவையான குழந்தைகளுக்கான மாலை நேர நொறுக்குத் தீனி தயார்.
பொரி உருண்டை பிடிக்கும் பொழுது நன்றாக அழுத்திப் பிடிக்கவும். மொறு மொறுவென்று இருக்கும் பொரியை உபயோகிக்கவும் அப்பொழுது தான் சுவை நன்றாக இருக்கும்.
நன்றி | மாலை மலர்