ராகி கூழ்
காலையில் ராகி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அத்தகைய ராகியை கூழ் அல்லது கஞ்சி போன்று செய்து சாப்பிடலாம். பலரும் கடையில் விற்கப்படும் ராகி மாவு கொண்டு தான் கூழ் செய்து குடிப்பார்கள்.
ஆனால் ராகியை வாங்கி ஊற வைத்து அரைத்து பால் எடுத்து கூழ் செய்து குடித்தால், அதன் சுவையே அலாதி தான்.
இங்கு அப்படி ராகியை ஊற வைத்து பால் எடுத்து எப்படி கூழ் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
ராகி – 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் – தேவையான அளவு, நெய் – 1/4 டீஸ்பூன், வெல்லப்பாகு – 2 டீஸ்பூன்.
செய்முறை
முதலில் ராகியை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மறுநாள் காலையில் மீண்டும் ராகியைக் கழுவி, மிக்ஸியில் போட்டு 2-3 முறை அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி மீண்டும் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் துணியை விரித்து, அத்துணியில் அரைத்த ராகியை ஊற்றி நன்கு பிழிந்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேண்டுமானால், அரைத்த ராகியை இன்னும் சிறிது தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைத்து பால் எடுத்துக் கொள்ளலாம்.
பின்பு ஒரு வாணலியில் அந்த பாலை ஊற்றி, பால் கெட்டியாக இருந்தால், சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கரண்டி கொண்டு நன்கு கட்டிகள் சேராதவாறு கிளறி விட வேண்டும்.
ஒரு கட்டத்தில் அந்த பால் சற்று கெட்டியாக ஆரம்பிக்கும். அப்போது நெய் மற்றும் சர்க்கரை பாகு சேர்த்து நெருப்பை குறைத்து, மீண்டும் நன்கு கிளறி விட்டு இறக்கி பரிமாறினால், ராகி கூழ் ரெடி!
ஆதாரம்: ஒன் இந்தியா நாளிதழ்