பாரம்பரிய உணவு வகைகளில் பால் கொழுக்கட்டையும் ஒன்று. பண்டிகைக் காலங்களில் பால் கொழுக்கட்டைக்கு முக்கிய இடம் உண்டு. பாரம்பரிய மணம் மாறாமல் பால் கொழுக்கட்டையை எப்படி செய்வது என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி மா – ஒரு கப்
நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பால் – ஒரு கப்
துருவிய தேங்காய் – அரை கப்
சீனி – ஒரு கப்
தண்ணீர் – முக்கால் கப்
ஏலக்காய் தூள் – கால் ஸ்பூன்
செய்முறை :
முதலில் அரிசி மா ஒரு கப் அளவு எடுத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, நன்கு கட்டிகள் இல்லாமல் கலக்க வேண்டும்.
பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கலந்து விட்டுக் கொள்ளுங்கள். பின்பு சூடான தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு பதத்துக்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கவும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாச்சியை வையுங்கள். முக்கால் கப் அளவுக்கு தண்ணீர் சேர்க்கவும். அத்துடன், ஒரு கப் அளவுக்கு சீனி சேர்க்க வேண்டும்.
சீனி கரைந்து பாகு மாதிரி வந்ததும், நீங்கள் உருட்டி எடுத்துள்ள சிறு உருண்டைகளை அதில் ஒவ்வொன்றாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு பத்திலிருந்து பதினைந்து நிமிடம் நன்கு கொதித்த பிறகு, ஒரு கப் அளவுக்கு காய்ச்சி ஆறின பாலை சேர்க்கலாம்.
பின்னர் இதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து, கால் ஸ்பூன் ஏலக்காய் தூள் தூவி, சிறிதளவு நெய் விட்டு நன்கு கலந்து விடுங்கள்.
மீண்டும் ஒரு கொதி, நன்கு வந்த பிறகு, அடுப்பை அணைத்து சுடச்சுட பரிமாற வேண்டியது தான்.