”பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை. அதிமுக மீண்டும் வலிமை பெறும்’ என அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரான முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்ததாவது.
”நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகளை விட, 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது ஒரு சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்றிருக்கிறது. இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றியாகும்.
ஒவ்வொரு தேர்தலிலும் சூழலுக்கு ஏற்றவாறு வெற்றி தோல்வி அமையும். ஒரு கட்சி தோல்வி அடைந்தால் மீண்டும் தோல்வி அடையும் என்பது இல்லை.
ஒவ்வொரு முறையும் மக்களவைத் தேர்தல் என்றாலும், சட்டப்பேரவை பொதுத் தேர்தல் என்றாலும் வாக்கு வித்தியாசம் மாறி மாறி தான் வரும் . மக்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தான் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள்.
பாஜக வளர்ந்து விட்டதாக செய்திகள் வெளியாகிறது. தேர்தலில் பாஜக கூட்டணி அதிக வாக்குகள் பெற்றதாகவும் தவறான செய்திகள் தான் அதிகம் வருகிறது. புள்ளி விவர கணக்குப்படி 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலை விட 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது.
தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள சரிவுகள் விரைவில் சீரமைக்கப்படும்.
தமிழக மக்கள் விழிப்புடன் உள்ளனர். எந்த சமயத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து வாக்களிக்கிறார்கள். வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும்.
அதிமுக – புரட்சித் தலைவர் காலத்திலும் சரி, புரட்சித்தலைவி ஜெயலலிதா காலத்திலும் சரி, தொடர்ந்து தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தது. வெற்றி வரும் வரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். வெற்றி பெற்ற பின்னர் தமிழகத்தை மறந்து விடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்பதால் தான் அதிமுக இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. ஆட்சி அதிகாரம் வேண்டும் என நினைத்திருந்தால்.. தேசிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்திருக்கும்.
தேர்தலில் வெற்றி தோல்வி என்பதை எல்லாம் பின்னடைவாக எடுத்துக் கொள்ள முடியாது. அதிமுக மீண்டும் வலிமை பெறும். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே நான் கூறியதை மீண்டும் தெரிவிக்கிறேன்.
நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.