ரஷ்ய இராணுவத்தில் இணைந்துகொண்ட இலங்கையர்களில் 13 பேர், உக்ரேன் போர்முனையில் உயிரிழந்துள்ளதாக, இலங்கை அரசாங்கத்துக்கு ரஷ்யா அறிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 04ஆம் திகதியன்று, உக்ரேன் இராணுவத்துடன் தொடர்பில் இருந்த ‘பல் மருத்துவர்’ கெப்டன் ரனிஷ் ஹேவகே உட்பட மூவர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், ரஷ்யாவுடன் தொடர்பில் இருந்த இலங்கையர்கள் குழுவொன்று போரில் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகின்ற போதிலும், அது உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
மேலும், விடுதலைப் புலிகளுடனான போருக்குப் பின்னர், இலங்கைப் படையினர் இவ்வளவு குறுகிய காலத்தில் உயிரிழந்தது இதுவே முதல் முறை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ரஷ்ய – உக்ரேன் யுத்தத்துக்கு மத்தியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, விசேட தூதுக்குழுவொன்று இன்று (24) ரஷ்யா நோக்கிப் புறப்படவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவொன்றே, இவ்வாறு ரஷ்யாவுக்கு பயணிக்கவுள்ளது.
இந்த விசேட தூதுக்குழுவுக்கும் ரஷ்ய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று, மொஸ்கோவில் இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது, பல சுற்று இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.