இம்மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய சட்டங்களை எதிர்த்து, இந்தியத் தலைநகர் புதுடில்லியில் ஆயிரக்கணக்கான சட்டத்தரணிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் மீதான கும்பல் பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்கப் புதிய சட்டம் வழிவகுக்கிறது. விசாரணைக்கு முன்னர் சந்தேகநபர்களைத் தடுத்துவைப்பதற்கான பொலிஸாரின் அதிகாரங்கள் விரிவாக்கப்படுகின்றன. அத்துடன், விசாரணை முடிந்த 45 நாள்களுக்குள் நீதிபதிகள் எழுத்துபூர்வமாகத் தீர்ப்புகளை வெளியிடவேண்டும்.
பாதிக்கப்பட்டோரை மையமாகக் கொண்டு, இந்தப் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், நீதிக்காக நீண்ட காலம் காத்திருப்பதை இது முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால், சட்டத்தரணிகள், எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகிய தரப்பினர் இந்த மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அவை பொலிஸ் அதிகாரிகளுக்கு மிதமிஞ்சிய அதிகாரத்தைக் கொடுக்கும் என்றும் சட்டத்தரணிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறி, போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.