உலகெங்கிலுமிருந்து பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்தன..
ஆனால் என்னைப் பெற்றவளுக்கு
இந்த நாளைத் தெரியாது..
நானும் சொல்லவில்லை
நான் பிள்ளையாய்ப் பிறந்தேன்
அவள் அம்மாவாய்ப் பிறந்தாள்
இதையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டாடும் சூழலில்
நாங்கள் வாழவில்லை
சித்தாளாய் மண்சுமந்து
விவசாயக்கூலியாய்
களைவெட்டி கதிரறுத்து
தறிக்கூடத்தில் நூல்சுற்றி
எங்களைக் காப்பாற்றிய
தாயின் பிள்ளைகள்
நானும் என் தங்கையும்..
இதைக் கழிவிரக்கத்தில்
சொல்லவில்லை-
கம்பீரமாகத்தான் சொல்கிறேன்
உலகம் முழுவதும்
தாய்மையின் முகம்
பெரும்பாலும் இதுதான்..
அதனால்தான் மக்சீம்கார்க்கியின்
நீலவ்னா உலகம் முழுமைக்கும் தாயானாள்
பசியை வெல்வதற்கே நமக்கு
இந்த ஒருதலைமுறை போயிற்று
இதற்குள்தான் நாம் கல்விகற்று
இலக்கியம் படித்து
நல்லரசியலுக்குக் குரல் கொடுத்து
பணத்துக்காக அறம்பிறழாமல்
அடுத்தவன் காலை நக்காமல்
வாழ்ந்து தீர வேண்டியிருக்கிறது..
பிள்ளைகளைக் கரையேற்ற வேண்டியிருக்கிறது
தேவைக்கும் இருப்புக்கும் நடுவில்
எத்தனை அவமானங்கள் அலைக்கழிப்புகள் துரோகங்கள்..
இத்தனைக்கும் நடுவில்
இவைகளை அனுபவிக்கும் நண்பர்கள் தோழர்களின் நட்பும்
தோழமையும் வாழ்த்துகளும் உபகாரங்களும்தான்
நம்பிக்கையோடு நம்மை
நாளையை நோக்கி இட்டுச் செல்கின்றன
அப்படியான பேரன்பை
இன்று உணர்ந்து ஆராரோ வாழ்த்துகளை
அனுபவித்த மகிழ்வில் நான்
என்னைப் பெற்றவளுக்கு
அம்மா நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்
அவளுக்கு
இதனைப் படிக்கத் தெரியாது..
அவள் மொழியில் எனக்குச் சொல்லத் தெரியாது..
ஆனாலுமென்ன
நன்றி தாயே,
நீ நாணித் தலைகுனியும்
எந்தவொரு பாவத்தையும்
உன்மகன் செய்யமாட்டான் என்னும் சூளுரையே
என் தாய்வாழ்த்து
கவிதா பாரதி