மலேசியாவில் இஷா (Esha) என்று பரவலாக அறியப்பட்ட சமூக ஊடக (Tiktok) பிரபலமான ராஜேஸ்வரி அப்பாவு (30 வயது), இணைய வழி மிரட்டலைத் தாங்கிக் கொள்ள முடியாமல், இம்மாதம் 5ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 40 வயது ஆணும் 35 வயதுப் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இணையக்குற்றங்கள் அதிகரித்து வருவதால் மலேசிய அரசாங்கம் புதிய விதிமுறைகளை விதிக்கிறது.
அதாவது மலேசியாவில் குறைந்தது 8 மில்லியன் பயனீட்டாளர்கள் பதிவு செய்திருந்தால், அந்தச் சமூக ஊடகத் தளத்துக்குத் தனி உரிமம் தேவை. அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் முதல் புதிய உரிமத்துக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். அப்படி உரிமத்தைப் பெறத் தவறினால் அது குற்றமாகும். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மேலும் புதிய சட்டம் நடப்புக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சமூக ஊடகச் சேவைகளும் இணையக் குறுஞ்செய்திச் சேவைகளும் மலேசியச் சட்டங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும் தொடர்பு, ஊடக ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்ப்பட்டுள்ளது.
புதிய நடவடிக்கையால் பாதுகாப்பான இணையத்தையும் இன்னும் நல்ல பயனீட்டாளர் அனுபவத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கமுடியும் என்று மலேசியத் தொடர்புத்துறை அமைச்சர் பாமி பாட்சில் தெரிவித்துள்ளார்.