புலம்பெயர்வோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு அவுஸ்திரேலியா அரசாங்கம் உள்ளூர்ப் பல்கலைக்கழகங்களில் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவுள்ளது.
எனினும், அது பல பில்லியன் டொலர் மதிப்புள்ள கல்வித் துறையைப் பாதிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அவுஸ்திரேலியா பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க வெளிநாட்டினர் 1,600 ஆஸி. டொலர் கொடுத்து விசா வாங்கவேண்டியிருக்கும். விசா நிராகரிக்கப்பட்டால் பணத்தைத் திரும்பப் பெறமுடியாது. இந்தக் கட்டணம் இதற்கு முன்னர் 710 டொலராக இருந்தது. வெளிநாட்டு மாணவர்களின் வருகை கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு 48 பில்லியன் டொலர் வருவாயை ஈட்டித்தந்தது.
இந்நிலையில், வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கைக்கும் வரம்பு விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வீடமைப்பு நெருக்கடி போன்ற பிரச்சினைகளுக்குத் தாங்கள் குறைகூறப்படுவதாக வெளிநாட்டு மாணவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். உள்ளூர் மாணவர்களைவிட வெளிநாட்டு மாணவர்கள் செலுத்தும் கட்டணங்கள் ஒரு மடங்கு அதிகமாகும்.
அரசாங்கத்தின் கொள்கை மாற்றம் எந்த அளவுக்குப் பல்கலைக்கழகங்களைப் பாதிக்கும் என்று இப்போது தெளிவாகத் தெரியவில்லை.
இதேவேளை, மாற்றங்களால் அவுஸ்திரேலிய கல்வித் துறை மீதான நம்பிக்கை குலைந்துவிடுமோ என்ற அக்கறை உருவெடுத்துள்ளதுடன், அவுஸ்திரேலியாவின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் என்கின்ற கருத்தும் வெளிவருகின்றன.