போலந்துக்கும் உக்ரேனுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டிருக்கிறார்.
இந்தியப் பிரதமர் ஒருவர் போலந்துக்குச் செல்வது 45 ஆண்டுகளில் இதுவே முதன்முறை ஆகும். இரு நாடுகளும் 70ஆவது ஆண்டு உறவைக் கொண்டாடுகின்றன.
இந்தியாவின் முக்கியப் பொருளியல் நட்புநாடு போலந்து என்று மோடி குறிப்பிட்டுள்ளார். அவர், போலந்துப் பிரதமரையும் ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளார். மேலும், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் பற்றி இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
போலந்துத் தலைநகர் வார்சாவில் (Warsaw) மூன்று முக்கிய நினைவிடங்களில் மலர்வளையம் வைக்கும் சடங்குகளில் மோடி கலந்துகொண்டார். இரண்டாம் உலகப் போரில் போலந்துச் சிறுவர்களைக் காத்த இந்திய ஆட்சியாளருக்கு அவர் இதன்போது அஞ்சலி செலுத்தினார்.
இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாளை (23) முதல் முறையாக உக்ரேனுக்குச் செல்லவிருக்கிறார். இதன்மூலம் உக்ரேனுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.