“வழக்காடு மன்றம் என்பது ஒரு ஃபோர்மட் (Format – வடிவம்). அதில், இரண்டு தரப்புக்கள் உண்டு. இரு தரப்பு வாதங்களும் மன்றத்தில் முன்வைக்கப்படும். அந்த இரு விதமான வாதங்களையும் மக்கள் அப்படியே நம்பி, ‘நல்லா இருக்கே இந்த பொய்ன்ட்’ என்று கைதட்டிவிட்டுப் போய்விடக்கூடாது. ஏனென்றால், எங்களது வாதங்களில் அசுரனும் வருவான்; தெய்வமும் வரும்; இரண்டும் வரக்கூடும். அசுரன் அழகாக இருப்பான். தெய்வம் அமைதியாக இருக்கும். இந்த இரண்டில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை சரியாக தீர்மானிப்பதற்கும், ‘மிகை நாடி மிக்க கொளல்’ என்ற நிலைக்கு வந்து முடிவெடுப்பதற்கும் ஒரு மூளைப்பயிற்சி தேவை. அதற்கான களங்களே இந்த வழக்காடு மன்றம், பட்டிமன்றம்….” என தமிழ்நாட்டு வழக்கறிஞர் சுமதி சொன்னபோது, தர்மத்தையும் நீதியையும் புத்தியால் சிந்திக்கவேண்டும் என்கிற கருத்து வெளிப்பட்டது.
ஈபிகோ, செக்ஷன் இத்தனை என்று தமிழக நீதிமன்றங்களில் வாதாடக்கூடிய வழக்கறிஞர் சுமதி, அதே தர்க்கித்தல் பாணியை, அண்மையில் நடந்தேறிய கொழும்பு கம்பன் விழா, வழக்காடு மன்றத்திலும் கையாண்டிருந்தார்.
இராமாயணத்தில் மிகவும் பேசப்படுகிற பெண் கதாபாத்திரமான மந்தரை என்கிற ‘கூனி’ ஒரு சதிகாரி; கொடியவள்; பெண் குலத்துக்கே மோசமான உதாரணம் என்றுதான் காலங்காலமாக இழிவுபடுத்தப்படுகிறாளே தவிர, அவளுக்கு வேறு நல்ல விம்பங்கள் கிடையாது.
அப்படியிருக்க, மந்தரை ‘குற்றமற்றவள்’ என்று வழக்கத்துக்கு மாறாக, புதிய கண்ணோட்டத்தில், பேராசிரியர் பர்வீன் சுல்தானாவின் வாதத்துக்கு எதிரான, வலிதான கருத்துக்களோடு வாதாடினார் வழக்கறிஞர் சுமதி.
வழக்காடு மன்றம் நிறைவடைந்த பின்னர், வீரகேசரிக்கு வழங்கிய பேட்டியின்போது, தான் எடுத்து வாதாடியது, உண்மையில் தன் கருத்தல்ல எனக் கூறிய சுமதி, “வழக்காடு மன்றம் என்பது ஒரு ஃபோர்மட்தானே…” என்று தொடங்கி, மேற்சொன்னபடி நீண்டதொரு விளக்கமளித்தார்.
“நாம் எதை தேடிப் போகிறோம்?”
எங்களது வாதங்களில் அசுரனும் வருவான், தெய்வமும் வரும் என்றவர், ஒரு கட்டத்தில் சமூக ஊடகங்களை பற்றி பேசும்போது, “சமூக வலைத்தளங்களில் நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது. அதில் நாம் எதை தேடிப் போகிறோம் என்பதே முக்கியம். கள்ளுக்கடையும் இருக்கும்; பன்னீர் சோடா கடையும் இருக்கும். நாம் எதை விரும்பி குடிக்கிறோம் என்பது நம் பிரச்சினை. எல்லா கடைகளும் இருக்கும். சமூக வலைத்தளங்களும் அப்படித்தான்” என்றார்.
இவரது இந்த கூற்றினூடாக ‘தேர்ந்தெடுத்தல்’, ‘தெரிவுசெய்தலின்’ முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது.
தொடர்ந்து, அவர் இலங்கைக்கு வருகைதந்து இலக்கிய நிகழ்வில் பேசிய அனுபவத்தை பகிர்ந்துகொண்டபோது,
“நகைச்சுவையை ரசிக்க வரவில்லை…”
“எல்லா இலக்கியவாதிகளும் இலங்கையை விரும்பக் காரணம், இங்கே மக்கள் நகைச்சுவையை ரசிப்பதற்காக நிகழ்வுகளுக்கு வருவதில்லை. இலக்கியம் இன்னும் நம்மை பண்படுத்துவதற்கு, அதில் என்ன இருக்கிறது, பேச்சாளர்கள் எப்படி பேசுகிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதை உள்வாங்கி, தங்களை தாங்களே மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆகப் பெரிய நோக்கத்தோடு விழாவுக்கு வருகிறார்கள்.
“பேச்சாளர்கள் பொறுப்புணர்வோடு பேச வேண்டும்”
“தங்களை செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு வரக்கூடிய ரசிகர்களை பெருவாரியாக தமிழகத்தில் பார்க்க முடியாது. அவர்கள் தங்களது அலுவல்கள், அழுத்தங்கள் காரணமாக, ‘எதுவாக இருந்தாலும் நகைச்சுவையாக சொல்லுங்கள்’ என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.
இரவு முழுவதும் ஓய்வாக உட்கார்ந்து கூத்து வேடிக்கை பார்ப்பது போல், இலக்கிய நிகழ்வுகளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் கூத்துக்கலையை குறைத்து மதிப்பிடவில்லை. அந்த கலை ஆற்றுகையை ஓய்வு நேரத்தில்தான் நாம் பார்க்க முடியும். அதிலிருந்து எதையும் உள்வாங்கிக்கொள்ளும் நோக்கம் பெரிதாக யாருக்கும் இருக்காது. அதை ஒரு நகைச்சுவையாக, தமாஷாக பார்ப்பவர்கள்தான் தமிழ்நாட்டில் அதிகம். அதனால் தமிழ்நாட்டில் பல இலக்கிய விழாக்கள் நீர்த்துப்போகக்கூடிய சூழல் ஏற்பட்டுவிட்டது.
ரசிகர்களின் மனநிலை அவ்வாறிருந்தாலும், பேச்சாளர்கள், தங்களை தாங்களே செதுக்கிக்கொண்டு, பார்வையாளர்களையும் செதுக்கக்கூடிய பணியை செய்ய வேண்டும். ஆனால், இந்த கடமையிலிருந்து எமது பேச்சாளர்கள் வழுவிவிட்டார்களோ, வழுவிக்கொண்டிருக்கிறார்களோ என்றொரு பெரிய கேள்வி மனதில் உள்ளது.
ஆழமான பேச்சை கேட்கும் ரசிகர்கள் வெளியே வந்து, ‘நீங்கள் அப்படிச் சொன்னது என் மனதை பாதித்துவிட்டது. நான் அதை பின்பற்றுவேன்’ என்று சொல்கிறபோது, பேச்சாளர்கள் பொறுப்புணர்வோடு பேச வேண்டும். மக்கள் நம்மை நம்புகிறார்கள்; அவர்களுக்கு நாம் நம்பிக்கை துரோகம் செய்துவிடக்கூடாது; பொய்யற்ற ஒரு விடயத்தை நாம் மேடையில் பேசிவிடக் கூடாது என்பதை உணர வேண்டும்.
அந்த வகையில், பேச்சாளர்களான எங்களை நாங்களே புடம்போட்டுக்கொள்ளவும் மனத் தூய்மை செய்துகொள்ளவும் ஏற்ற களமாக இலங்கையில் இலக்கிய நிகழ்வுகள் அமைந்துள்ளன. இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விடயம்” என கூறினார்.
“எது தமிழ்?”
தமிழுக்கும் அடுத்த தலைமுறைக்குமான பிணைப்பு இறுக்கமாக இருக்குமா அல்லது தளர்த்தப்பட்டிருக்குமா என கேட்டபோது,
“இதில் என்ன சிக்கல் என்றால், இங்கே எல்லாமே இரண்டாக பிரிந்திருக்கிறது. ‘தமிழ்’ என்று நீங்கள் சொல்கிறீர்களே, எது ‘தமிழ்’?
காப்பியங்கள் தமிழா?
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, பதினெண் மேல்கணக்கு, அகநானூறு, புறநானூறு… இவை தமிழா?
அல்லது இன்றைய நவீனத்துவம், பின்நவீனத்துவம், பின்நவீனத்துவத்தின் நவீனத்துவம்… இவை தமிழா?
இப்படிப் பார்க்கிறபோது, அனைத்தும் பிரிந்து கிடக்கின்றன.
இவை எல்லாம் ஒன்றுபட்டு, காப்பியத்தில் இருக்கின்ற அழகை, நவீனத்துவவாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நவீனத்தில் சொல்லக்கூடிய புதிய முறைகளையும், காப்பியத்தை ரசிப்பவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். இதற்கொரு உடன்படிக்கை தேவை.
இந்த இரண்டு தரப்பினரிடையே சமதளம், சமாதான மனநிலை இருந்தால்தான் தமிழை ஒரே சீராக முன்னெடுத்துச் செல்ல முடியும். இல்லாவிட்டால், தமிழ் இரண்டாக, மூன்றாக, நான்காக… தனித்தனியாக பிரிந்துவிடும்.
‘இது என்ன பின்நவீனத்துவமா’ என்று அவர்களும், ‘இன்னும் எவ்வளவு காலத்துக்கு கண்ணகியை பற்றி பேசப் போகிறீர்கள்’ என்று இவர்களும் கேட்கக்கூடாது.
க்ளாசிக்ஸ் ஆர் ஓல்வேஸ் க்ளாசிக்ஸ். இவை இலக்கணம் போன்றவை. காலம் கடந்து பேசப்பட வேண்டியவை. அவற்றுள் புகுந்து கரைந்து, பிறகு, அதிலிருந்து ஒரு புதிய படைப்பிலக்கியத்தை நீங்கள் உருவாக்கும்போது உங்கள் எழுத்துக்கள் செம்மைப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
“மொழிகளுக்குள் சண்டை கூடாது”
“தவிர, மொழிகளுக்குள்ளும் சண்டை இருக்கக்கூடாது. பிற மொழி இலக்கியங்களையும் உள்வாங்க முயற்சிக்க வேண்டும். வால்மீகி என்ன நினைத்தார், கபீர், புரந்தரதாசர், துளசிதாசர் என்ன நினைத்தார்கள் என்பதை பற்றி ஆழ்ந்து படிக்க முடியாவிட்டாலும் தெரிந்துகொள்ள முற்படும்போது நமக்கொரு திறப்பு கிடைக்கிறது.
நாம் தமிழர்கள் என்பதால் தமிழ் இலக்கியங்களோடு நின்றுவிடக்கூடாது. நம் மனதை திறந்துவைக்க வேண்டும். எல்லா இடங்களிலிருந்தும் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அறிவு கொட்டட்டுமே!” என்றார்.
“பயணமே ஒரு வெற்றிதான்!”
வாழ்க்கையில் சுமார் 75 தடவை தோல்விகளை கடந்து வந்ததாக அடிக்கடி கூறும் சுமதி, தோல்வியை எதிர்கொள்ள திராணியின்றி, துவண்டு வீழ்பவர்களை நோக்கி சில வார்த்தைகளை பரிமாறிக்கொண்டார்.
“நான் நிறைய இராணுவ வீரர்களின் கதைகளை வாசிப்பேன். அடுத்த நிமிடம் சாகப்போகிறோம் என்பது தெரிந்தும் அவன் போராடுகிறான். எதற்காக? வாழ்வதற்காகவா?
சாகும் வரை போராட வேண்டும் என்பதுதான் அந்த வீரன் நமக்கு சொல்கிற பாடம்.
வாழ்க்கை என்பது வெற்றியல்ல, வெற்றியை நோக்கிய பயணம். அந்த பயணமே ஒரு மிகப் பெரிய ‘வெற்றி!’. அதற்குப் பிறகு ஒரு வெற்றி இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், அப்படி கிடையாது.”