அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.
இதனையடுத்து புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி உரையை ஆற்றினார்.
அதில் டிரம்ப், இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது என்றார்.
அத்துடன், “அமெரிக்காவில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. குடியரசு கட்சி வெற்றிக்காக வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கருக்கும் எனது நன்றி. வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் மனைவிக்கு நன்றி. இக்கட்டான சூழலில் எனக்கு துணையாக இருந்த குடும்பத்தினருக்கு நன்றி. 47ஆவது ஜனாதிபதியாக என்னை தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்களுக்கு நன்றி” எனத் தெரிவித்தார்.
மேலும், “அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் வகையில் ஆட்சி நடத்துவேன். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும்” என்றார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், பல்வேறு யூகங்களையும், கணிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி, டிரம்ப் வெற்றி பெற்றுள்ளமை வரலாற்று வெற்றியாக கருதப்படுகிறது.
டிரம்பின் எதிர்காலத் திட்டம்
சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றுவது டொனால்ட் டிரம்பின் முக்கிய திட்டமாகும். இதில் முக்கியமானது அமெரிக்காவின் தெற்கு எல்லையில், குடியேறிகள் வருவதை தடுக்க தடுப்புச் சுவர் எழுப்புவதாகும். அவரின் இந்தத் திட்டத்திற்கு நிதி அளிப்பதற்கான நாடாளுமன்ற ஒப்புதல் அப்போது அவருக்கு கிடைக்கவில்லை.
எனினும், இம்முறை தேர்தல் பிரசாரத்தின்போது அந்தக் கட்டுமானத்தை விரைவில் முடிப்பேன் என்று கூறியே வாக்கு சேகரித்தார். அதை அவர் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், குடியேறிகளை நாட்டைவிட்டு வெளியேற்றும் திட்டமானது அதிக செலவீனத்தைக் கொண்டது என்றும் கடினமானது என்றும் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.