இந்தியாவின் தமிழகத்தில் சில இடங்களில் புயல் வீசலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலின் காற்றழுத்தத் தாழ்வு வலுவடைவதால் புயல் ஏற்படும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னை உட்பட சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உண்டு என்றும்சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதையொட்டி சென்னை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை போன்ற இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையாகக் கடலோரப் பகுதிகளுக்குத் தேசியப் பேரிடர் நிவாரணப் படையினரும் மாநில மீட்புக் குழுவினரும் அனுப்பப்பட்டுள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (27) காலை அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, இலங்கை – திரிகோணமலையிலிருந்து கிழக்கு- தென்கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும்.
தமிழகத்தில் நாளை மறுநாள் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.