உலகத்தில் முதல் முதலாக சும்மா இருந்த ஆள் யார் என்று பார்த்தால் அது வானத்தையுத் பூமியையும் படைத்த அந்தக் கடவுள் தான். ஆறே ஆறு நாட்களில் வானத்தையும் பூமியையும் மனிதனையும் மிருகங்களையும் பறவைகளையும் படைத்துக் களைத்த ஆண்டவர், ஏழாம் நாள் சும்மா ஓய்ந்திருந்தார் என்று வேதாகமம் கூறுகிறது (ஆதியாகமம் 2:2).
ஆறு நாட்கள் மாய்ந்து மாய்ந்து உழைத்து உலகத்தையும் உயிரினங்களையும் படைத்து விட்டு, ஏழாம் நாள் சும்மா இருப்பதன் முக்கியத்துவத்தை, அவசியத்தை கடவுள் மனிதனிற்கு முன்மாதிரியாக காட்டியிருந்தாலும், இந்த ஆனானப்பட்ட மனிதனுக்கோ சும்மா இருக்கத் தெரியாது.
சும்மா இருக்கிறது என்றால் எப்பவும் எதுவும் செய்யாமல் சும்மாவே இருப்பதல்ல. ஆறு நாட்கள் உழைத்து விட்டு ஏழாம் நாள் சும்மா இருந்த இறைவன் காட்டிய வழியில், யூதர்கள் கடைப்பிடிக்கும் Sabbath போல, ஆறாண்டுகள் பயிரிட்ட நிலங்களிற்கு ஏழாவது ஆண்டில் யூதர்கள் அளிக்கும் ஓய்வைப் போல, காடு மேடுகளெல்லாம் ஓடியாடி வேலை செய்யும் ஒவ்வொருவர் வாழ்விலும் சும்மா இருக்க வேண்டிய காலகட்டம் ஓன்று கட்டாயம் வரும். சும்மா இருக்க வேண்டிய காலத்தில் சும்மா இருக்காமல் எதையாவது நோண்டினால் தான் பின்னாட்களில் சிக்கல் பிக்கல்கள் வரும்.
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் கூறிவிட்டுச் சொன்ற “சும்மா இரு” என்ற தத்துவம், இந்தக் காலத்தில் Olga Mecking என்ற நெதர்லாந்தில் வாழும் போலந்துக்காரி எழுதிய “Niksen: The Dutch art of doing nothing” என்ற புத்தகத்தினூடாக மீளவும் உயிர்பெற்று உலகில் வலம்வரத் தொடங்கியிருக்கிறது. டச்சு மொழியில் Niksen என்றால் Doing absolutely nothing என்ற பொருள்படுமாம்.
யாரைக் கேட்டாலும் “பிஸியாக இருக்கிறேன்” என்று சொல்வதே fashion ஆகிப் போய்விட்ட இன்றைய உலகத்தில் “சும்மா இருக்கிறேன்” என்று சொல்பவனை உலகம் விசரன், பைத்தியக்காரன் என்றே பார்க்கும். ஆனால், பிஸியாக இருப்பதை விட சும்மா இருப்பதே வலு கஷ்டமான விஷயம். ஏனென்றால் Niksen சொல்லும் “சும்மா இரு” என்பது எந்த நோக்கமும் இல்லாமல் சும்மா இருப்பது (to do nothing , without a purpose) என்பதாகும்.
திரைப்படம் பார்ப்பதும், சமூக வலைத்தளங்கள் நோண்டுவதும், நண்பர்களுடன் அரட்டை அடிப்பதும் சும்மா இருத்தலுக்குள் அடங்காது. சாப்பிடும் போதும் நடக்கும் போதும் உடல் நலம் பற்றியும் உடல் எடையைப் பற்றியும் நினைக்கும் குறிக்கோள் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருப்பதால் அதுவும் சும்மா இருத்தலுக்குள் அடங்காது.
எங்கட சனம் எந்தவித குறிக்கோளும் இல்லாமல் சும்மா இருக்கிறவர்களை ஏமலாந்திகள் என்று சொல்லும். Niksen என்பதும் ஏமலாந்தல் தான். ஆனால் என்ன விஷயம் என்றால், ஓடோடு என்று ஓடியாடி உழைத்துவிட்டு கொஞ்ச நேரம் சும்மா இருந்து ஏமலாந்துவதைத் தான் Niksen போதிக்கிறது, யூதர்களின் Sabath உறுதிசெய்கிறது, வானத்தையும் பூமியையும் படைத்த ஆண்டவரும் கடைபிடித்தார்.
Depression உம் Stress உம் burnout உம் அதிகரித்துவரும் உலக வாழ்க்கையில், ஒருவிதமான circuit breaker ஆக, புதிய மொந்தையில் பழைய கள்ளாக Niksen வந்து உதித்திருக்கிறது. கதிரையில் சும்மா இருந்து யன்னலுக்கு வெளியே பார்த்து ஏமலாந்திக் கொண்டு ஒரு குட்டி nik அடித்துக் கொண்டிருப்பது படைப்பாற்றலை (creativity) ஊக்குவிக்குமாம். சில நேரங்களில் இந்த பகல்கனவு (day dreaming) காணும் பொழுதுகள் சிக்கலான பிரச்சினைகளிற்கான தீர்வுகள் பளிச்சிடும் கணங்களாகவும் அமைந்து விடுமாம்.
சும்மா இருக்கும் கலையை கைகொள்வதால் மூளைக்கும் உளவளத்திற்கும் மட்டுமல்ல உடல்நலத்திற்கும் நன்மை பயக்கிறது என்று ஆங்காங்கே முளைவிடத் தொடங்கியிருக்கும் ஆய்வுகள் பறைசாற்றிக் கொண்டிருக்க, ஐரோப்பாவில் இயங்கும் சில gym களில் யோகா வகுப்புகள் போல Niksen வகுப்புகளும் ஆரம்பித்திருக்கிறார்களாம்.
சும்மா இருக்கும் காலம் என்பது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, விளையாட்டிற்கும் வியாபாரத்திற்கும் ஏன் அரசியலிற்கும் பொருந்தும். கிரிக்கெட்டில் நன்றாக அடித்து ஆடிக்கொண்டிருக்கும் Batsman, off stump இற்கு வெளியே சிவனே என்று போய்க் கொண்டிருக்கும் பந்தை சொரிய வெளிக்கிட்டு, keeper இடம் பிடி கொடுத்து out ஆவான். Pavilion நோக்கி கமக்கட்டுக்குள் bat ஐ வைத்துக்கொண்டு batsman நடந்து கொண்டிருக்கும் போது தான் அவனது மண்டை அவனுக்குச் சொல்லும்.. சும்மா இருந்திருக்கலாம்.
கிரிக்கெட்டைப் போலத் தான் வியாபாரத்திலும் அரசியலிலும் சும்மா இருப்பதற்கான தருணங்கள் நிறையவே வரும். சும்மா இருக்க வேண்டிய நேரத்தில் சும்மா இருக்காமால், எதையாவது செய்துவிட்டு பிறகு தலையைச் சொரிந்து கொண்டருக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவதை Niksen நிட்சயம் தடுக்கும்.
சும்மா இருப்பது லேசுபட்ட விஷயமாகத் தெரியவில்லை. சும்மா இருத்தல் காலம் என்பது அஞ்ஞாதவாச காலத்தை போன்றது. உண்மையிலேயே அது ஒரு எதிர்காலத்திற்கான தயார்படுத்தல் காலம் என்றே கருதவேண்டும். சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், சும்மா இருக்க வேண்டிய அஞ்ஞாதவாச காலத்தில் சும்மா இருக்காமல் தங்களைத் தாங்களே பலப்படுத்திக் கொண்டு தான் குருஷேத்திர யுத்தத்திற்கு வந்தார்கள்.
டச்சுக்காரன் சொல்லுவது போல சும்மா இருக்கப் பழகுவதே ஒரு கலை தான் போலிருக்கிறது.
சும்மா இருக்கப் பழகுவோம்..
ஜூட் பிரகாஷ்
மெல்பேர்ண்