இங்கிலாந்தில் சிறுமிகள் மூவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த அக்ஸல் ரூடாகுபானா எனும் (18 வயது) இளைஞனுக்கு 52 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இளைஞன் மீது கொலை மற்றும் கொலை செய்யும் முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
குறித்த கத்திக்குத்துச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமிகள் உட்பட மேலும் 10 பேர் காயமுற்றிருந்தனர்.
அந்தக் கொடூரச் சம்பவம் நடப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன் ரூடாகுபானாவின் பெற்றோர் உதவி நாடி 4 முறை பொலிஸாரை அணுகியுள்ளனர்.
அதில் ஒருமுறை ரூடாகுபானா பஸ்ஸில் கத்தியை எடுத்துச் சென்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் அவரைத் தடுத்து வைக்காமல் இளைஞனை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அவரிடமிருந்து கத்திகளை மறைத்து வைக்கும்படி, பொலிஸார் ரூடாகுபானாவின் அம்மாவிடம் அறிவுறுத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்தி : அஞ்சலி நிகழ்வில் குவிக்கப்பட்ட பொம்மைகள்!
அதேவேளை, ரூடாகுபானா வயதில் உள்ளவர்களுக்கு 52 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிப்பது இதுவே முதல்முறை என்று நீதிபதி கூறினார். அவர் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கமாட்டார் என்று நம்பினால் மட்டுமே நன்னடத்தையின் பேரில் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்படக்கூடும் என்றும் நீதிபதி கூறினார்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் Southport பகுதியில் உள்ள நடனப்பள்ளியில் வைத்து இடம்பெற்ற குறித்த கத்திக்குத்துச் சம்பவத்தால், இங்கிலாந்தின் சில பகுதிகளில் கலவரம் வெடித்தமை குறிப்பிடத்தக்கது.