தமிழ் ஊடகத்துறையில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ள இராஜநாயகம் பாரதி, ஈழப் போர் இடம்பெற்ற நெருக்கடியான காலத்தில் தனது சிறப்பான ஊடகப் பணியை ஆற்றியிருந்தமை தமிழர் தேசம் ஒரு போதும் மறவாது.
நேரிய பார்வையில் அமைதியான பேச்சும், அதிராத சுபாவமும் பாரதியின் சிறப்பு அடையாளங்களாகும். ஆழமான பார்வைகளால் அனைத்தையும் அறிந்து வைத்திருந்த ஊடகப் பேரொளியாக விளங்கியவர்.
ஈழப் போராட்டம் முனைப்படைந்த காலகட்டத்தில், தமிழ் ஊடகத்துறையில் பாரிய பங்களிப்புச் செய்தவர்களில் ஒருவர் மறைந்த பாரதி இராசநாயகம் அவர்கள் ஆவார்.
முரசொலி, வீரகேசரி, தினக்குரல் என அவரது பத்திரிகையுலகப் பங்களிப்பு பரந்தது. இளம் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளைத் தினக்குரலில் தொடர்ந்து வெளியிட்டு ஊக்குவித்த பெருமைக்குரியவர். அத்துடன் புதிய எழுத்தாளர்கள் பலரின் உருவாக்கத்துக்கு ஊக்குவித்து ஊடகக் களங்களை அமைத்தும் கொடுத்துள்ளார்.
திருநெல்வேலி மைந்தன்
யாழ்ப்பாணம் திருநெல்வேலியை பிறப்பிடமாகக் கொண்ட பாரதி 1980 களில் ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் ஆரம்பித்தில் பணியாற்றினார்.
அதன் பின்னர் முரசொலி பத்திரிகை ஆசிரிய பீடத்திலும் பணியாற்றினார்.
1987 இல் பாரதி முரசொலி ஆசிரியர் பீடத்தில் பணிபுரிந்த காலகட்டத்தில்,
இலங்கை இந்திய ஒப்பந்தம் கையொப்பமாகிய பின்னர் குடாநாட்டில் இருந்து கிழக்கு மாகாணத்துக்கு ஊடகப்பணி காரணமாக சக ஊடகவியலாளர்களுடன் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் தனது வலது கையில் பாதிப்புக்கு உள்ளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழ் தேசிய ஊடகவியலாளர்களில் முக்கியமானமொருவராகத் தன்னை பின்னாளில் நிலைநிறுத்திக் கொண்ட பாரதி, 1990களின் பிற்பகுதியில் கொழும்பில், வீரகேசரி பத்திரிக்கையின் ஆசிரிய பீடத்தில் உதவியாசிரியராகப் பணியாற்றினார்.
போர் சூழ்ந்த எண்பதுகளின் பிற்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கில் இருண்ட காலமாக இருந்தபோதிலும், யாழ்ப்பாணத்தில் அதிகமான செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உருவாதற்கு ஈழப்போராட்டம் அடித்தளமிட்டது.
மறைந்த ஊடகர் பாரதி ஒரு பணியின் போது தனது வலது கையை இழந்ததன் மூலம் பெரும் விலையை செலுத்த வேண்டியிருந்தாலும், தொடர்ந்துபல காலம் ஊடகராக பணியாற்றி வந்தார். வடக்கில் மாத்திரமன்றி, அனைத்து தடைகளையும் துணிச்சலுடன் கடந்து கொழும்பிலும், ஒரு பத்திரிகையாளராக தொடர்ந்து பிரகாசித்தார்.
தினக்குரல் பாரதி
1997ஆம் ஆண்டு தினக்குரல் பத்திரிகை தோற்றம் பெறவே அதில் தன்னை இணைத்துக் கொண்ட பாரதி ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக 2021 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்ததுடன் தினக்குரல் இணையத்தள ஆசிரியராகவும் இருந்தார்.
தினக்குரலில் மூத்த ஆசிரியர்களில் ஒருவராக அவரது பதவிக்காலம் மேலும் பிரகாசித்தது. அத்துடன் இலங்கை தமிழ் ஊடக கூட்டணியின் தலைவராகவும் செயல்பட்டார்.
இலங்கையின் ஊடக சுதந்திரம் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அவர் முக்கியமான பங்கையும் வகித்தார்.
2020களின் இறுதியில் மீண்டும் தனது மண்ணுக்குத் திரும்பிய பாரதி ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியதுடன் தற்போது வீரகேசரியின் வடபிராந்திய பதிப்பின் ஆசிரியராகப் பணிபுரிந்த வேளையிலேயே காலமானார்.
ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் ஆர். பாரதி, அபிமன்யு, பார்த்திபன் ஆகிய பெயர்களில் பல்வேறு
கட்டுரைகளை எழுதிவந்ததுடன் சர்வதேச ஊடகங்களுக்கும் அரசியல் கருத்துகளையும் செவ்விகளையும் வழங்கி வந்தார்.
தாயகத்தில் பல மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட ஊடக பயிற்சிப்
பட்டறைகளிலும் பணியாற்றி இளம் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து பயிற்சிகளை வழங்கியுள்ளார்.
ஊடகர் பாரதியின் பணியை கௌரவிக்கும் வகையில் பெப்ருவரி 2012 வெளியான மல்லிகை இதழ், இவரைப்பற்றிய சிறப்பிதழாக வெளியிடப்பட்டது.
தாயகத்தில் கடந்த சில வாரங்களாக நோய் வாய்ப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த வாரம் பெப்ரவரி ஒன்பதாம் திகதி தனது வீட்டில் காலமானார்.
அவரது மறைவு இலங்கை ஊடக சகோதரத்துவத்திற்கும் தமிழ் ஊடகங்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். தமிழ் ஊடகத்துறையில் நிரப்ப முடியாத வெற்றிடமாய் பாரதியின் நினைவு கனத்துக் கிடக்கின்றது.
ஐங்கரன் விக்கினேஸ்வரா