ஈழத் தமிழ் மக்களின் விடுதலை வரலாற்றில் போர்க்காலங்களில் ஒலித்த குரலாக முதன்மை பெறுகின்ற பிபிசி அறிவிப்பாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு இலண்டனில் எதிர்வரும் 9ஆம் திகதியன்று இடம்பெறுகின்றது.
அண்மையில் பிபிசி தமிழோசையின் மூத்த அறிவிப்பாளர் ஆனந்தி அவர்கள் இலண்டனில் காலமாகியிருந்தார்.
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவராக செயற்பட்டிருந்த ஆனந்தி சூரியப்பிரகாசம் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லுகின்ற காலப் பணியினை ஆற்றியவர்.
எழுபதுகளில் இருந்து ஊடகப் பணியாற்றிவரும் ஆனந்தி, எண்பதுகளில் முகிழ்ந்த விடுதலைப் போராட்ட காலத்துடன் போர் மற்றும் அரசியல் சார்ந்த விடயங்களை பிபிசியில் வெளிக்கொணரும் குரலாகச் செயற்பட்டார்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை நேர்காணல் செய்து வெளியிட்டமை வாயிலாக உலக அளவில் கவனிப்புக்குரிய ஊடகவியலாளர் ஆனார்.
தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்த பிறகு, பிரபாகரன் ஒர் அதிசயப்பிறவி என்று அந்த நினைவினை நெகிழ்வாக நினைவுகூர்ந்தார்.
ஆனந்தி அவர்களின் மறைவு உலகத் தமிழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருக்கான நினைவு வணக்க நிகழ்வு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலண்டனில் இடம்பெறவுள்ளது.