தென்னிந்திய திரைப்பட நடிகர் மனோஜ் பாரதிராஜா, நேற்றிரவு (25 ) காலமானார்.
திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் மரணித்துள்ளார். அவருக்கு வயது 48ஆகும்.
தென்னிந்திய திரைப்பட பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனே, நடிகர் மனோஜ் ஆவார்.
மனோஜ், 1999ஆம் ஆண்டு “தாஜ்மஹால்” எனும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு நடிகராக அறிமுகமானார். பின்னர் “சமுத்திரம்” மற்றும் “கடல் பூக்கள்” போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
2023ஆம் ஆண்டில் “மார்கழி திங்கள்’ எனும் திரைப்படத்தை மனோஜ் இயக்கினார்.
மறைந்த மனோஜ்ஜிற்குத் திருமணமாகி இரு மகள்கள் உள்ளனர்.
நடிகர் மனோஜ்ஜின் மறைவு தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திரைப்பட பிரபலங்களும் இரசிகர்களும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இயக்குனர்கள் தியாகராஜன், பேரரசு, நடிகர்கள் பார்த்திபன், சூர்யா, ரோபோ சங்கர் மற்றும் பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலரும் கண்ணீர் மல்க மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மரணம் அடைந்த மனோஜ் உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 3 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் மனோஜ் உடல், பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.