மாஸ்டர் கார்ட் கிளிபர்ட் நொக் அவுட் றக்பி போட்டியிலும் கண்டி விளையாட்டுக் கழகம் சம்பியனாகி இந்த வருடத்திற்கான இரட்டை சம்பியன் பட்டங்களை சுவீகரித்துக்கொண்டது.
சில வாரங்களுக்கு முன்னர் நிறைவுபெற்ற லீக் சம்பியன் பட்டத்தையும் கண்டி விளையாட்டுக் கழகம் சுவீகரித்திருந்தது.
இந்த இரண்டு போட்டிகளிலும் கண்டி விளையாட்டுக் கழகம் மாத்திரமே தோல்வி அடையாத அணியாகத் திகழ்ந்தது.
நித்தவளை மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான கிளிபர்ட் கிண்ண நொக் அவுட் இறுதிப் போட்டியில் சீ.ஆர். கழகத்தை எதிர்த்தாடிய கண்டி விளையாட்டுக் கழகம் 41 (5 ட்ரைகள், 5 கொன்வேர்ஷன்கள், 2 பெனல்டிகள்) – 33 (5 ட்ரைகள், 4 கொன்வேர்ஷன்கள்) என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியனானது.
ஆரம்பம் முதல் கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இறுதிப் போட்டியின் இடைவேளையின்போது கண்டி கழகம் 3 புள்ளிகள் (17 – 14) வித்தியாசத்திலேயே முன்னிலை வகித்தது.
கண்டி கழகம் சார்பாக டிலுக்ஷ டங்கே, நைஜல் ரத்வத்தே, கெனுல ஹெட்டிஆராச்சி, டில்ஷாட் பரீத், ஹேஷான் ஜன்சன் ஆகியோர் 5 ட்ரை புள்ளிகளையும் நைஜல் ரத்வத்தே 2 பெனல்டி புள்ளிகளையும் , 4 கொன்வேர்ஷன் புள்ளிகளையும் ஷஹித் ஸும்ரி ஒரு கொன்வேர்ஷன் புள்ளிகளையும் பெற்றுக்கொடுத்தனர்.
சீ.ஆர். அண்ட் எவ்.சி. சார்பாக சமோத் முத்துநாயக்க, ஓமல்க குணரட்ன (2), முர்ஷித் தொரே, மனிக்க ரபேரு ஆகியோர் 5 ட்ரை புள்ளிகளையும் முர்ஷித் தொரே 4 கொன்வேர்ஷன் புள்ளிகளையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதேவேளை, கண்டி விளையாட்டுக் கழக வீரர் நைஜல் ரத்வத்தே நேற்றைய இறுதிப் போட்டியுடன் றக்பி விளையாட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.