ஓ!
நந்தி அன்னையே
வீசிடும் உன் கடலலைகளிடம் சொல்
இருண்ட யுகத்தின்
இறுதிக்கணங்கள்
ஆரம்பித்துவிட்டன என்று
உன் மடியில் பொதிந்த
சதை பிண்டங்களை
காண்பிக்கச் சொல்
அங்கே நிர்வாணமாய் புதைத்த
என் தோழிகள் பாதம் நனைக்க
புறப்படுகிறோம்
அங்கே நெஞ்சம் பிளந்த
என் அண்ணன் தலை நீவிட
புறப்படுகிறோம்
கந்தக குண்டுகளை சுவைத்த
பால் மறவா என் குழந்தை
உடலை முகர்ந்திட
புறப்படுகிறோம்
நந்தி கடலே
எத்தனை உடல்களை உன்
மடியில் சுமந்துள்ளாய்
சித்திரமாய் தெரியும்
திட்டுகளை உருகிடச்சொல்-அதில்
கொலையுண்ட தேகங்கள்
உயிரோவியங்களாய்
மேவும் அப்போது
புரிவேன்
உள்ளார்ந்த நெஞ்சங்களே
பதினெட்டாம் நாள்
பரிவோடு காத்திரு தங்கள்
பாதம் தழுவிட வந்திடுவோம்
-கேசுதன்