காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னையிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (3) கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
எனினும், குறித்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண் ஜெயசேகர தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து தகவல்களைப் பெற்றிருந்தாலும், விமானத்தை ஆய்வு செய்ததில் எந்த சந்தேக நபர்களும் கண்டறியப்படவில்லை என்பதை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டு, அவர் உறுதிப்படுத்தினார்.
இந்தியாவில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்கள் இலங்கைக்கு வந்தாக வெளியான எச்சரிக்கையை தொடர்ந்து நேற்றுக் காலை 11:59 மணிக்கு சென்னையிலிருந்து வந்த UL 122 விமானத்தில் பாதுகாப்புப் படையினர் முழுமையான சோதனை நடத்தினர்.
சென்னை பகுதி கட்டுப்பாட்டு மையத்திலிருந்து எச்சரிக்கையைப் பெற்ற பிறகு உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தேடுதல் நடத்தப்பட்டதாக ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, சென்னையில் இருந்து வந்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடையவர் சென்றதாக தகவல் வெளியானது.
இதையடுத்து கொழும்பில் தரையிரங்கிய அந்த விமானத்தை இலங்கை பாதுகாப்பு படையினர் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கராவாதிகளை பிடிக்க இந்திய இராணுவத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகப்படுபவர்கள் அனைவரும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரையும் விடமாட்டோம் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சென்னையில் இருந்து இலங்கை வந்த விமானத்தில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர் இருந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.