செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் குளியல் சோப்… ஒவ்வொன்றும் ஒருவிதம்….

குளியல் சோப்… ஒவ்வொன்றும் ஒருவிதம்….

2 minutes read

சாதாரண சோப்பு ஒத்துக் கொள்ளாதவர்கள் மற்றும் சரும பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சோப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் வாங்கும் வீட்டு சாமான்களின் பட்டியலில், குளியல் சோப்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. தினமும் அதனை பயன்படுத்தி குளியல் போட்டு விடுகிறோம். நாம் விரும்பும் சோப்பை பயன்படுத்தி குளித்தால்தான் நமது சருமம் புதுப்பொலிவு பெறுவதாக நம்புகிறோம். உடலும் புத்துணர்ச்சி பெறுவதாக நினைக்கிறோம். எந்த சோப்பை பயன்படுத்தினால் என்ன மாதிரியான மணம் வீசும் என்று தெரிந்துவைத்திருப்பவர்களில் பலருக்கும் அதில் வீசும் மணத்தின், அதில் பொங்கும் நுரையின் ரகசியம் தெரியாது. அதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சோப்பின் மூலப்பொருள், ஒருவகை உப்பு. அதில் காரத்தன்மை பொருந்திய ஆல்கலைனையும், தாவர கொழுப்புகளையும் சரியான விகிதத்தில் சேர்க்கும்போது குளியல் சோப்பு தயாராகிறது. நிறத்திற்கான பொருளும், வாசத்திற்கான பொருளும் அதில் சேர்க்கப்படுகிறது. நுரைக்கான ரசாயனமும் அதில் கலக்கப்படுகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் சோப்பில் உங்கள் சருமத்திற்கு ஏற்ற காரத்தன்மையும், அமிலத்தன்மையும் இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். கார, அமிலத்தன்மையை குறிக்கும் அளவீடு 5.5 என்ற கணக்கில் இருக்க வேண்டும். அவ்வாறு அமையாவிட்டால் வறட்சி, அரிப்பு, எரிச்சல் போன்ற சரும பிரச்சினைகள் உருவாகலாம்.

எண்ணெய் பசை நிறைந்த சருமத்திற்கு வேப்பிலை, எலுமிச்சை கலந்த சோப்பு நல்லது. வறண்ட சருமத்திற்கு கோகோ பட்டர், வெஜிடபிள் எண்ணெய், கற்றாழை, ஜோஜோபா எண்ணெய், வைட்டமின் கலந்த எண்ணெய், அவகோடா ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட சோப்பு சிறந்தது. சோப்பின் அழகிய நிறங்களும் குறிப்பிட்ட சில ரசாயன மூலப்பொருட்களை சார்ந்தே அமைகிறது.

டி.எப்.எம். என்பது சோப்பின் தரத்தை குறிப்பிடுகிறது. முதல் தர சோப்பு என்பது 75 சதவீதத்திற்கு அதிகமான டி.எப்.எம் கொண்டதாகும். 65 முதல் 75 சதவீதம் வரை டி.எப்.எம் இருந்தால் அது நடுத்தரமானது. சிலர் அறிமுகமாகும் அனைத்து சோப்புகளையும் பயன்படுத்திப் பார்ப்பார்கள். அது தவறான பழக்கம். சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சோப்பு வாங்கும்போது டி.எப்.எம் அளவினை பார்த்து வாங்குங்கள். வீரியம் நிறைந்த ரசாயனங்களான சோடியம் லாரில் சல்பேட், சோடியம் லாரீத் சல்பேட், சின்தடிக் ப்ராக்ரன்ஸ் ஆகியவைகளால் தயாரிக்கப்பட்ட சோப்புகளை குளியலுக்கு பயன்படுத்தக்கூடாது.

பெரியவர்கள் சிலர் பேபி சோப்பு எனப்படும் குழந்தைகளுக்கான பிரத்யேக சோப்பினை பயன்படுத்துகிறார்கள். அது சரியில்லை. அதை பயன்படுத்தினால் உடலில் அழுக்கு தங்கிவிடும். சரும துளைகள் பிறந்த குழந்தைகளுக்கு இருக்காது. அதற்கு ஏற்றபடி வீரியம் குறைந்த பொருட்களை கொண்டே குழந்தைகளுக்கான சோப்பு தயாரிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு சருமத்துளைகள் முழுமையடைந்து எண்ணெய் பிசுபிசுக்கும். அழுக்கும் படியும். அவற்றை நீக்கும் சக்தி பேபி சோப்பில் இல்லை. எனவே மூன்று வயதுக்கு மேல் பேபி சோப்பு பயன்படுத்த வேண்டாம்.

மூலிகை சோப்பு என்று சொல்லப்பட்டாலும், அதிலும் ரசாயன மூலப்பொருட்களை சேர்க்கத்தான் செய்வார்கள். இயற்கை பொருட்களில் தயாராகும் சோப்புகளும் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கும் போது தரத்தை சரிபார்த்துக்கொள்ளுங்கள். தினமும் இருமுறை மட்டுமே சோப்பு பயன்படுத்தி முகத்தை கழுவுங்கள். பிற நேரங்களில் சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவினால் போதுமானது. அடிக்கடி முகத்தில் சோப்பு போட்டால், சருமம் வறண்டுபோகும். ‘லிக்விட்’ எனப்படும் திரவ சோப்பு வகை ஈரத்தன்மை அதிகம் கொண்டது. அதில் ரசாயனத்தின் வீரியம் குறைவு.

சாதாரண சோப்பு ஒத்துக் கொள்ளாதவர்கள் மற்றும் சரும பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சோப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். சோப்பில் சேர்க்கப்படும் அதிகப்படியான கொழுப்பின் வாசத்தை குறைக்கவே நறுமண ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. எனவே நறுமணத்தினை மட்டுமே விரும்பி சோப்பு வாங்குவதை தவிர்த்திடவேண்டும்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More