தங்களது மகனோ அல்லது மகளோ செல்போனைக் கையாளும் போது எந்தவிதமான பக்கங்களைப் பார்க்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும்.
தடுமாற வைக்கும் இணையத்தால் தடம் மாறும் இளைய தலைமுறையை மீட்டெடுக்கும் முயற்சியை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு நாட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் இளைஞர்களின் கையில் தான் இருக்கிறது என்பார்கள். ஆனால் இன்றைய இளைஞர்களின் கையில் இருப்பது செல்போனும், அதனுடன் இணைந்திருக்கும் இணையமும் என்றாகி விட்டது. இந்தநிலையில் ஆக்க சக்தியாக உருவாக்கப்பட்ட இணையம் பல இளைஞர்களுக்கு அழிவு சக்தியாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
‘கொரோனா தொற்றின் பக்க விளைவுகளை பலரும் அனுபவித்து வருகின்றனர். அத்தகைய ஒரு விளைவாக கல்வியுடன் செல்போனும் இணைந்து விட்டது என்று சொல்லலாம். செல்போனைப் பார்க்காதே கெட்டுப் போவாய் என்று எச்சரித்த பல பெற்றோர் வேறு வழியில்லாமல் குழந்தைகளின் கையில் செல்போனைக் கொடுக்க வேண்டிய நிலையை கொரோனா உருவாக்கி விட்டது. ஆன்லைன் வகுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டாலும் பல பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தகவல் தொடர்பு சாதனமாக செல்போன்கள் தொடர்கிறது.
இந்தநிலையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக இருப்பது பாலியல் ரீதியான விளம்பரங்களாகும். பொதுவாக டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன்கள் ஏற்படுத்தும் மாற்றத்தால் சற்று தடுமாற்றமான மன நிலை இருப்பது இயல்பானதுதான். ஆனால் அவ்வாறு தடுமாறும் மாணவர்களை தடம் மாற வைப்பதில் இணையத்தின் பங்கு பெருமளவு உள்ளது.
குறிப்பாக பாலியல் ரீதியான பாப் அப் விளம்பரங்கள் இளைஞர்களைத் தடுமாற வைக்கிறது. திரைப்படம் தொடர்பாகவோ, பாடம் சம்பந்தமாகவோ தெரிந்து கொள்ள இளைஞர்கள் ஒரு இணையதளத்துக்குள் செல்லும்போது திடீரென்று ஆபாச வாசகங்களுடன் அல்லது ஆபாச படங்களுடன் ஆபாச இணையதளம் குறித்த விளம்பரம் ஒன்று உள்ளே நுழைகிறது.
இது இளைஞர்களின் மனதை சலனப்படுத்துகிறது. சபலத்தால் அந்த வலைத்தளத்துக்குள் நுழையும் இளைஞர்கள் அதற்குள் இருந்து மீண்டு வர முடியாத பாலியல் வலைக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இதுவே பல பாலியல் குற்றங்களுக்கு அடித்தளமாகவும் அமைந்து விடுகிறது. இன்று இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மீது பல போக்சோ வழக்குகள் பதிவாகி வருவது வேதனையான உண்மையாகும்.
தடுமாற வைக்கும் இணையத்தால் தடம் மாறும் இளைய தலைமுறையை மீட்டெடுக்க வேண்டிய கடமை அனைத்து தரப்புக்கும் உள்ளது. இதில் முதலிடத்தில் இருப்பது பெற்றோரின் கடமையாகும். தங்களது மகனோ அல்லது மகளோ செல்போனைக் கையாளும் போது எந்தவிதமான பக்கங்களைப் பார்க்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும்.
அத்துடன் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான புரிதல்களையும், நட்பான பகிர்தலையும் பெற்றோர் தர வேண்டும்.
அத்துடன் ஆபாச இணையதளங்களை முழுவதுமாக முடக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் கட்டமாக சைபர் கிரைம் போலீசார் மூலம் முழுமையாக கண்காணித்து பாலியல் ரீதியான பாப் அப் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தைக் கையில் வைத்திருக்க வேண்டிய இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தையே தொலைத்துவிட்டு பாலியல் குற்றவாளியாகவோ, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களாகவோ மாறும் அவலத்தைத் தடுக்க அரசு இணையத்தை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவசியமாகும்’.
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.
நன்றி | மாலை மலர்