திருமறைக்கலாமன்றத்தின் வவுனியாக் கிளையினை ஆரம்பிக்கும் முகமாக கூத்துக் கலைஞரும் ஓய்வு பெற்ற அதிபருமாகிய திரு எஸ்.பி. அலோசியஸ் அவர்கள் அங்கு வாழ்ந்த கலைஞர்களை இணைக்கும் முயற்சியில் வவுனியா வளாகத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த இளைஞர்களையும் அணுகுகின்றார்.
அப்போது வளாகத்தில் கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபாடு கொண்ட பலர் அதில் போய் இணைந்து கொண்டோம். முதல் கட்டமாக அப்போதிருந்த பங்குத் தந்தை மூலம் கலைத்தூது அருட்கலாநிதி மரிய சவேரியர் அவர்களிடம் அனுமதி பெறப் பட்டு நாடக ஆர்வலர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது.
பயிற்சியின் பொழுது மறைந்த நாடக கலைஞர்கள் திரு பிரான்சிஸ் ஜனம் அவர்கள் அரசய்யா அவர்கள் மொழிப் பயிற்சியும் உச்சரிப்பு பயிற்சியும் வழங்குவதற்காக ஓய்வு பெற்ற அதிபர் க.வை. தனேஸ்வரன் அவர்கள். பயிற்சிகளை வழங்க. இவர்கள் இங்கு பயிற்சி வழங்குகிறார்கள் என அறிந்த நாடக ஆர்வலர்களும் அன்று ஆசிரியர்களாக கடமையாற்றிக் கொண்டிருந்த திரு. விந்தன், திரு ராதாகிருஷ்ணன், திரு பாஸ்கரன், திரு மகிழ்ச்சிகரன் ஆகியோரும் இணைந்து கொள்கின்றனர்.
பின்னர், நண்பன் நிமால் கொன்சன்ரைன் அவர்களின் எழுத்திலும் இயக்கத்திலும் ‘எத்தனை லட்சங்கள்’ எனும் நாடகத்தை பழகி அங்கிருந்த பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் மேடையேற்றி மன்றத்திற்க்கு நிதி வளத்தினை ஏற்படுத்தி 97ம் ஆண்டு வவுனியாவில் திருமறைக்கலாமன்றம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அந்நிகழ்வினை அருட் கலாநிதியவர்களே சிறப்பாளராக வருகைதந்து செய்து வைத்தார்.
நினைவுகளும் சிந்தனைகளும் | கலைத்தூது அருட்கலாநிதி மரிய சவேரியர் சிறப்பு பதிவு…
சேகர் தமிபிராஜா – கனடா