செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் சரிநிகர் நினைவுகள்

சரிநிகர் நினைவுகள்

2 minutes read

1990 யூன் 10ஆம் திகதி சரிநிகரின் முதல் இதழ் வெளியான நாள். எவ்வாறான ஒரு பத்திரிகையைக் கொண்டு வர வேண்டுமென்று விரும்பியிருந்தோமோ அதற்கான முதற் காலடி அது.

தமிழில் அதுவரை காலமும் பேசப்படாதிருந்த பேசாப் பொருட்கள் அனைத்தையும் பேச விரும்பினோம். மாறுபட்ட அபிப்பிராயங்களைப் பரிமாறுவதற்கான களமாக இருக்க விரும்பினோம்.

சிங்கள மக்களோடு தமிழரும் முஸ்லிம்களும் மலையக மக்களும், ஆண்களோடு பெண்களும் மாற்றுப் பாலினத்தவரும் உயர்குடி என்று சொல்லப்பட்டவர்களோடு தலித்துக்களும் சரிநிகர் சமானமாக வாழ வேண்டும் என்று விரும்பினோம். அதற்கான குரலாக சரிநிகர் இருக்க வேண்டும் என்று விரும்பினோம்.

1989-1990 என்பது ஜனாதிபதி பிரேமதாசவின் காட்டாட்சிக் காலம். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஊடக சுதந்திரம் போன்ற எல்லாவகையான சுதந்திரச் செயற்பாடுகளும் முற்றாக மறுக்கப்பட்ட, கடும் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட ஒரு காலம்.
நதிகள் சிங்கள இளைஞர்களின் சடலங்ளைக் கரையொதுக்கிய காலம், எரிந்தோய்ந்த டயர்களிடையே தங்களுடைய மகனையோ மகளையோ துணையையோ அவர்களுடைய உறவுகள் பதைபதைப்புடன் தேடிக் கொண்டிருந்த காலம். அது ஒரு கொலையுதிர்காலமாக இருந்தது.

இந்தக் காலத்தில் தான் சரிநிகர் முதலாவது இதழ் வருகிறது. முதலாவது இதழ் உருவாகிற போது சரிநிகருக்கென்று அலுவலகமேதுமில்லை. விக்கியின் வீட்டு முற்றம் தான் சேரன், விக்கி சிவா ஆகியோர் கொண்ட ஆசிரியர் குழு கூடுகின்ற இடம். அந்த வீட்டு முன் விறாந்தை தான் சரிநிகரை வடிவமைப்பதற்கான இடம். கொட்டாஞ்சேனையிலுள்ள வில்சனின் கணனிக் கூடம் தான் கட்டுரைகளைக் கணணியில் தட்டச்சு செய்து கொள்கிற இடம். அவர்கள் தட்டச்சுச் செய்து தருவார்கள். அவற்றை நாம் மெய்ப்புப் பார்த்துக் கொடுத்ததும் நாம் கேட்டுக் கொள்கிற அளவில் பத்திகளாக வடிவமைத்துத் தருவார்கள். அவற்றை எடுத்து வந்து விக்கியின் வீட்டு முன் விறாந்தையில் பாயை விரித்து A3 அளவிலான பத்திரிகை அளவில் அவற்றை வெட்டி ஒட்டி படங்ளையும் சேர்த்து வடிவமைப்பை முடித்து அச்சகத்துக்கு அனுப்பினோம். ஒரு சிங்கள நண்பர் மருதானையிலுள்ள ஒரு அச்சகத்தில் அச்சிட்டுத் தந்து உதவினார். விநியோகத்திற்கு அப்போது என்னிடம் ஒரு சைக்கிள் இருந்தது. கொழும்பு முழுக்க அதில் தான் விநியோகித்தேன். மேர்ஜ்ஜிலும் யுக்தியவிலும் பணியாற்றிய ஜோசப் விநியோகத்தில் பெரும் உதவிகளைச் செய்திருந்தார்.

இவ்வாறு தான் முதலாவது சரிநிகர் வெளியானது. தமிழின் பிரதான தினசரிகளே அச்சுக் கோர்த்து அச்சிட்டுக் கொண்டிருந்த காலத்தில் offset முறையிலான அச்சுப்பதிப்பில் வெளியான முதற் தமிழப் பத்திரிகையாக் சரிநிகர் இருந்தது.

ஒரு முறை சாந்தி சச்சிதானந்தனுடன் கதைத்துக் கொண்டிருந்த போது சரிநிகருடைய ‘output’ என்னவென்று கேட்டார். ஒரு உற்பத்தி நிறுவனத்துடைய ‘output’ உடனடியாக அளவிடுவது போல இதனை அளவிட முடியாது நீங்கள் ஒரு பத்து இருபது வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறினேன்.

தற்செயல் நிகழ்வாக எட்டியாந்தோட்டை கருணாகரன் இன்று சரிநிகர் பற்றி ஒரு பதிவை இட்டிருந்தார். (இற்றைக்கு 31 வருடங்களுக்கு முன்னர் இதேநாளில் (10 யூன் 1990) தான் சரிநிகர் முதல் இதழ் வெளியானது. அவருடைய பதிவும் அதனை ஒட்டி அதன் கீழ் அபிப்பிராயங்கள் தெரிவித்திருப்பவர்களும் அதனை மெய்ப்பித்திருக்கிறார்கள். ஒரு பத்திரிகை அதனைத் தான் செய்ய முடியும் என்று நம்புகிறேன். சரிநிகர் தன்னளவில் அது செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்திருக்கிறது என்பதையே இவை வெளிப்படுத்துகின்றன. எட்டியாந்தோட்டை கருணாகரனுக்கும் அபிப்பிராயங்களைத் தெரிவித்த நண்பர்களுக்கும் நன்றி.

சரிநிகர் விட்ட இடம் வெற்றிடமாக இருப்பதாகவே பலர் அபிப்பிராயம் தெரிவித்திருந்தார்கள். உண்மை தான். மீளவும் ஒரு முறை சரிநிகரை குறைந்தது ஐந்தோ அல்லது பத்தோ வருடங்களுக்குத் தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வர வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கிறது. கனவு மெய்ப்பட வேண்டும்.!

சரிநிகர் சிவகுமார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More