எமது ஈழத் திருநாட்டின் வடக்கில் அமைந்துள்ள ஐந்து மாவட்டங்களில் யாழ்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களான வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் வன்னி என்று அழைக்கப்படுகின்றன.
கல்வியில் மிகப் பின்தங்கியிருந்த இம்மாவட்டங்களில் இலக்கியப் படைப்பாளிகள் மிகச் சொற்பம் என்றே சொல்லலாம். அதிலும் பெண் படைப்பாளிகளை விரல் விட்டு எண்ணினால் விரல்கள்தான் மிஞ்சும் என்ற நிலை ஒருகாலத்தில் இருந்தது.
எழுபதுகளில் தான் நூல் வெளியீடுகளே தொடங்கின என்றுகூடச் சொல்லலாம். அதற்குமுன் சிலம்பு நாதபிள்ளை என்பவரால் பாடப் பட்ட ஓமை அந்தாதி என்ற கவிதை நூல் வெளிவந்திருந்தாலும் அந்நூல் வவுனியா ஓமந்தை வீரகத்திப் பிளையார்மேல் பாடப்பட்டது என்பதற்குமேல் அந்நூலுக்கும் வவுனியாவிற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.
1973 ஆம் ஆண்டிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து ஒரு எழுத்தாளரின் ஆக்கங்கள் வெளிவரத் தொடங்கி வன்னியின் இலக்கியத்துறைக்கு வளம் சேர்க்கத் தொடங்கின. அந்த எழுத்தாளர்தான் இன்று தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் பரவலாக அறியப் பட்டிருக்கும் தாமரைச் செல்வி.
பொதுவாகவே எந்தத் துறையிலும் எந்த இடத்திலும் ஆண்கள் முன்னோடிகளாக இருப்பதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் எழுத்துத் துறை முன்னோடியாக விளங்குபவர் தாமரைச் செல்விதான் என்பது எனது அபிப்பிராயம்.
வேறு எழுத்தாளர்கள் எழுத்துத் துறையில் பிரவேசித்திருந்தாலும் பிரபலமான ஒருவரைத்தான் முன்னோடி என்று சொல்லலாம். ஏனெனில் அவரைத்தான் அடுத்தவர்கள் பின் பற்றுவார்கள். எனது அறிவுக்கு எட்டிய வரையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தாமரைச் செல்வியே இரண்டு வகையிலும் முன்னோடி என்பேன்.
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த வன்னியூர்க் கவிராயரும், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த முல்லை மணியும், வன்னியின் முன்னோடிப் படைப்பாளிகளாக இருந்தாலும் தாமரைச் செல்வியே தான் பெண் எழுத்தாளர்களுக்கு வன்னியின் முன்னோடி ஆதர்ச எழுத்தாளர் என்று கூறலாம்.
2019 இல் வெளிவந்து தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த நாவல் விருது பெற்ற 570 பக்கங்களைக் கொண்ட “உயிர் வாசம்” என்ற நாவல் வரை இவரே இன்றும் வன்னியின் சிறந்த பெண் படைப்பாளியாக விளங்குகிறார் என்று சொல்லலாம்.
பாடத்திட்டத்தில்
இலங்கை கல்வி அமைச்சின் தமிழ் மொழிக்கான பதினோராம் ஆண்டு பாடத்திட்டத்திலுள்ள “இன்னொரு பக்கம்” என்ற சிறுகதை மூலம் இலங்கையின் இளைய தலை முறைக்கு அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் இவர், தமிழ் நாடு கல்வி அமைச்சின் பதினோராம் ஆண்டு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் “பசி” என்ற சிறுகதை மூலம் தமிழக இளந் தலைமுறைக்கும் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறார் என்பது இலங்கையர்கள் யாவருக்கும் பெருமையும் மகிழ்ச்சியும் தரும் செய்தியாகும்.
பல்கலைக் கழக ஆய்வு
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், பேராதனைப் பல்கலைக் கழகம், கிழக்குப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்ற எட்டு மாணவர்கள் தமது பட்டப் படிப்பின் இறுதி ஆண்டு ஆய்வுக்காக இவரது ஆக்கங்களை ஆய்வு செய்து பட்டம் பெற்றிருக்கிறார்கள்.
ஆங்கில மொழியில்
இவரது ஐந்து சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.”இடைவெளி” “வாழ்க்கை” ஆகிய சிறுகதைகள் பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்களால் முறையே “The Gap” “The Life”ஆகிய பெயர்களிலும், பாதை என்ற சிறுகதை “The Rugged Path”என்ற பெயரில் திரு.ஏ.ஜே. கனகரட்ணா அவர்களாலும், “முகமற்றவர்கள்” என்ற சிறுகதை திரு.பெ.இராஜசிங்கம் அவர்களால் “Faceless People” என்ற பெயரிலும் “எங்கேயும் எப்போதும்”என்ற சிறுகதை “The Inevitable”என்ற பெயரில் திரு.K.S.சிவகுமாரன் அவர்களாலும் மொழி பெயர்ப்புச் செய்யப் பட்டுள்ளன.
சிங்கள மொழியில்
இவரது “ஒரு மழைக்கால இரவு” என்ற சிறுகதை திருமதி.ஜெயசித்ரா அவர்களாலும்,”வன்னியாச்சி” என்ற சிறுகதை திருமதி பெ.அனுராதா ஜெயசிங்க அவர்களா லும், “வாழ்க்கை” என்ற சிறுகதை பேராசிரியர் பியசீலி விஜயமான அவர்களாலும் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.
யேர்மன் மொழியில்
இவரது “ஓட்டம்’” என்ற சிறுகதை எல்வின் மாசிலாமணி அவர்களால் யேர்மன் மொழியில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
குறும்படங்கள்
இவரது “பசி”என்ற சிறுகதை தமிழ்நாடு இமயவர்மன் என்பவரால் குறும் படமாகத் தயாரிக்கப்பட்டு இலண்டனில் நடைபெற்ற விம்பம் குறும்பட விழாவில் காட்சிப் படுத்தப்பட்டு பார்வையாளர் விருது பெற்றது. “1996”(இடைவெளி) என்ற சிறுகதை இயக்குனர் திரு மகேந்திரன் அவர்களாலும்,”பாதணி” என்ற சிறுகதை திரு.ஜான்.மகேந்திரன் அவர்களாலும் “சாம்பல் மேடு” என்ற சிறுகதை திரு. திலகன் அவர்களாலும் குறும்படங்களாகத் தயாரிக்கப் பட்டுள்ளன. மற்றும் “பாதை” “வாழ்க்கை”ஆகிய சிறுகதைகளும் குறும்படங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஓவியக் கலைஞர்
ஓவியம் வரைவதிலும் வல்லவரான இவர் தனது படைப்புக்கள் சிலவற்றுக்கு தாமே படங்களும் வரைந்துள்ளார். வீரகேசரி, தினகரன், சுடர், ஈழநாடு, ஜீவநதி தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் குங்குமம் ஆகியவற்றில் இவரது ஓவியங்கள் வெளிவந்துள்ளன.
தாமரைச் செல்வி
1953 ஆம் ஆண்டில் சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் மகளாக இலங்கையின் வட புலத்தில் வன்னிப் பெருநிலப் பரப்பில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தன் என்னும் பிரதேசத்தில் குமரபுரம் என்னும் கிராமத்தில் பிறந்த இவரது பெயர் ரதிதேவி.
பரந்தன் இந்து மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்ற இவர் தனது 20 வயதில் எழுத்துத் துறைக்குள் காலடி எடுத்துவைத்தார்.
1973 இல் வானொலிக்கு எழுதத் தொடங்கிய இவரின் முதல் சிறுகதை 1974 இல் “ஒரு கோபுரம் சரிகிறது” என்ற தலைப்பில் வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து இலங்கையில் தினகரன், சிந்தாமணி, ஈழநாடு,ஈழமுரசு,முரசொலி,ஈழநாதம், தினக்குரல்,ஆகிய பத்திரிகைகளிலும், மல்லிகை, ஞானம், சிரித்திரன், ,சுடர், வெளிச்சம், நாற்று, மாணிக்கம், கலாவல்லி, களம், தாரகை, ஆதாரம், கிருத யுகம், விளக்கு, அமிர்த கங்கை, பெண்ணின் குரல், தாயகம், வளையோசை, மாருதம், ஜீவநதி, யாழ்மதி, நுட்பம் ஆகிய ஈழத்துச் சஞ்சிகைகளிலும், தமிழ் நாட்டு ஆனந்த விகடன், குங்குமம், மங்கை, இதயம் பேசுகிறது ஆகிய சஞ்சிகைகளிலும், பரீஸ் ஈழநாடு, பரீஸ் ஈழமுரசு, எரிமலை, களத்தில், அவுஸ்ரேலிய மெல்பேர்ன் எதிரொலி, கனடா தாய்வீடு, முதலான பத்திரிகைகளிலும், நடு(பிரான்ஸ்), வணக்கம் லண்டன், அக்கினிக் குஞ்சு (அவுஸ்ரேலியா) ஆகிய இணையத் தள சஞ்சிகைகளிலுமாக இவரது இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.
நாவல்
ஆறு நாவல்களும், ஒரு குறு நாவலும், நான்கு சிறுகதைத் தொகுப்புக்களும் இவரது நூல் வடிவம் பெற்ற ஆக்கங்களாகியுள்ளன.
1977 இல் இவரது “சுமைகள்” என்ற நாவல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்து இவருக்குச் சிறந்த அறிமுகத்தையும் பரவலான வாசகர் கூட்டத்தையும், ரசிகர்களையும், புகழையும் கொடுத்தது.
இந்த நாவலைப் படித்தபின் இவரைக் காணவேண்டுமென்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது. 1985 இல் ஈழமுரசு பத்திரிகை நடத்திய அகில இலங்கை ரீதியான சிறுகதைப் போட்டி ஒன்றில் இவரது சிறுகதை ஒன்று முதல் இடம் பெற்றது. எனது “மீண்டும் ஒரு குரு ஷேத்திரம்” என்ற சிறுகதை இரண்டாம் இடம் பெற்றிருந்தது. அந்தப் பரிசளிப்பு விழாவில் இவரைக் காணலாம் என்று ஆவலோடு காத்திருந்தேன்.
இவர் விழாவிற்கு வந்த வழியில் ஏற்பட்ட யுத்தகால அசம்பாவிதங்களால் விழாவிற்கு வரவில்லை. 2000 த்தின் பின் நானும் எழுத்தாளர் திரு.ஒ.கே.குணநாதன் அவர்களும் இவரைக் காண இவரது பரந்தன் குமரபுரம் வீட்டுக்குச் சென்றிருந்தோம்.அங்கும் அவரைக் காணமுடியவில்லை. அடுத்த நாள் யாழ்ப்பாணத்தில் அவரைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன்.
அதன் பின் பலதடவைகள் இவரை இவரது கணவர் திரு.கந்தசாமி அவர்களோடு சந்தித்திருக்கிறேன். 2020 இல் நான் அவுஸ்ரேலியாவிற்கு வந்ததை அறிந்து, கனடாவில் வாழும் எனது நண்பர் திரு த.விஜயசேகர் சேகர் அவர்கள் எனக்கு தாமரைச் செல்வியின் தொடர்பு இலக்கத்தை அனுப்பி வைத்தார்.
தனது கணவரோடு மகள் டாக்டர் இளவரசி அவர்களின் குடும்பத்தோடு வாழ்ந்து வரும் தாமரைச் செல்வி அவர்களை நான் குடும்பத்தோடு சென்று சந்தித்து விருந்துண்டு மகிழ்ந்தேன். பின் இவரும் குடும்பத்தோடு நாங்கள் தங்கி இருக்கும் மகனின் வீட்டுக்கு விருந்தினராக வந்து மகிழ்வித்தார். இவரின் இன்னொரு மகளான டாக்டர் தமிழரசி அவர்கள் குடும்பமாக அவுஸ்ரேலிய மெல்பேர்ன் நகரில் வாழ்கிறார்..
பரிசுகள்
இவரது ஆக்கங்களுக்குக் கிடைத்த முக்கியமான சில பரிசுகள். இவரின் “பச்சை வயற் கனவுகள்” (நாவல்) இலங்கை தேசிய சாகித்திய மண்டல விருதையும், யாழ் இலக்கியப் பேரவையின் விருதையும் பெற்றது..”ஒரு மழைக்கால இரவு” (சிறுகதைத் தொகுப்பு) ”வீதியெல்லாம் தோரணங்கள்” (நாவல்) ஆகியவை முறையே வடக்கு கிழக்கு மாகாணசபை, வடக்கு மாகாண சபை ஆகியவற்றின் சிறந்த நூற் பரிசுகளைப் பெற்றன. “விண்ணில் அல்ல விடி வெள்ளி” (நாவல்) யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு பெற்றது. “தாகம்” (நாவல்) கொழும்பு சுதந்திர இலக்கிய அமைப்பின் விருதையும், யாழ் இலக்கியப் பேரவையின் பரிசையும் பெற்றது.”வேள்வித் தீ” (குறுநாவல்) முரசொலி பத்திரிகையின் முதல்ப் பரிசு பெற்றது. “வீதியெல்லாம் தோரணங்கள்” (நாவல்) வீரகேசரி, யாழ் இலக்கிய வட்டம் இணைந்து நடாத்திய கனகசெந்தி நாதன் நினைவுப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது.
இவரது மிகப் பெரிய நாவலான 570 பக்கங்களைக் கொண்ட “உயிர் வாசம்” என்ற நாவல் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கிய சிறந்த நாவல் விருது பெற்றது. இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவரின் இருபதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல்வேறு போட்டிகளிலும் பரிசுகள் பெற்றிருக்கின்றன.
கௌரவங்கள்
வடக்கு கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருது (2001), கொழும்பு கலை இலக்கிய கழகத்தின் விருது(2003). கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் “இலக்கியமணி” பட்டமும் தங்கப் பதக்கமும்(2002), எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது(2012), அக்கராயன் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் சாதனைப் பெண்மணி விருது(2000), தமிழ் நாடு சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது(2010), கண்டாவளைப் பிரதேச சபையின் கலாசாரப் பிரிவின் “ஒளிச் சுடர்” விருது(2011), யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒன்றியம் தனது வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு இலக்கியப் பணிக்கான கௌரவிப்பு(2015), மல்லிகை சஞ்சிகையின் அட்டைப் படக் கௌரவம்.(மார்ச் 2002),என பல விருதுகளையும் கௌரவங்களையும் இவர் பெற்றுள்ளார்.
நூல் வடிவில்
சுமைகள் (நாவல்)—1977, விண்ணில் அல்ல விடி வெள்ளி(நாவல்)—1992, தாகம்(நாவல்)—1993 வேள்வித் தீ(குறு நாவல்)—1994, ஒரு மழைக்கால இரவு (சிறு கதைகள்)—-1998, அழுவதற்கு நேரம் இல்லை(சிறுகதைகள்)—2002, வீதியெல்லாம் தோரணங்கள்(நாவல்)—2003, பச்சை வயல் கனவு(நாவல்)—2004, வன்னியாச்சி(சிறுகதைகள்)—2005, ஒருமழைக்கால இரவு, அழுவதற்கு நேரமில்லை, வன்னி யாச்சி ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புக்களிலும் இடம் பெற்ற சிறுகதைகளைக் கொண்ட வன்னியாச்சி—2018, உயிர் வாசம்(நாவல்)–2019
கிளிநொச்சி குமரபுரம், கொழும்பு ஆகிய இடங்களில் வாழ்ந்த தாமரைச் செல்வி அவர்கள் தற்போது அவுஸ்ரேலியாவில் வாழ்கிறார். இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியாவிற்கு களவாகப் படகுகளில் வரும் இலங்கைத் தமிழ் அகதிகள், வரும் வழியில் படும் சொல்லொணாத் துன்பங்களையும், வந்தபின் அவர்களது வாழ்க்கையையும், அவர்களது தாயகத்து உறவுகள் படும் துன்பங்களையும் உயிர்வாசம் என்ற நாவலில் விபரமாக, ஆதார பூர்வமாக, உணர்வு பூர்வமாக விபரித்திருக்கிறார்.
அவுஸ்ரேலியாவில் வாழ்ந்தாலும் எழுத்துத் துறையைக் கைவிடாமல் நேசித்து சுவாசித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஈழத்துப் புனைகதைத் துறையில் சிறந்துவிளங்கும் படைப்பாளிகளைப் பட்டியலிட்டால் முதல் வரிசையில் இடம் பிடிக்கத்தக்க ஆற்றல் மிக்க படைப் பாளியான தாமரைச் செல்வியிடமிருந்து இன்னும் பல அரிய படைப்புக்களை எதிர்பார்க்கிறோம். அவர் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம்.
எழுத்தாளர் தமிழ்மணி அகளங்கன்
கொழும்பில் இருந்து வெளியாகும் ஞானம் இதழில், அட்டைப்பட அதிதியாக இடம்பெற்ற கட்டுரை. நன்றி- ஞானம்
.