ஓர் இரவுப் பொழுதினிலே
உன் வீட்டு முற்றத்து மாமரச்சோலையில்
உன் உறவுகளோடு இருந்து உரையாடுகிறாய்
நிலவு வெளிச்சம்
உன் கன்னம் தொட்டுக்கொண்டிருக்க
பனித்துளி ஒவ்வொன்றும்
உன் கை விரல் நுனி பிடித்துத் தூங்குகின்றன
வல்வை இந்திரா விழாவிற்கு நீ வந்திருக்கிறாய்
கலை வண்ணமயமாக
மின்குமிழ்கள் மின்னி மின்னி ஒளிர்வதையே
மக்கள் வேடிக்கை பார்க்கின்றனர்
மின் குமிழ்கள் தழுவுவதென்னவோ
உன் கண்கள் பாயும் மின்சாரத்தையே
புகைக்கூண்டுகள் எல்லாம் வானம் நோக்கி
மிதந்து போகின்றன, அவை
நெருப்பாகக் கண்ணீர்விட்டு
அழுதுகொண்டே செல்கின்றன
உன்னைப் பிரிந்து செல்கிறோம் என்ற
கவலையில்
ஒரு முறை சச்சின் சிக்சர் அடித்த பந்தைத்
தொட்டுத் தூக்கி எடுத்திருக்கிறாய் நீ
அதற்குப் பிறகு
சச்சினின் சின்னதொரு சொட்டுதலுக்கும்
அது உன்னிடமே ஓடி வரத்தொடங்கியதாம்
ஓ…
சச்சினின் சாதனைக்கு
நீ மட்டும்தான் காரணம் என்பதை
ஐ.சி.சி பதிவிட்டு வைத்துள்ளதாம்
இரகசியமாகவே
தைப்பொங்கல் தினத்தன்று
கடற்கரை மணல் மைதானத்தில்
பட்டம் விடும் போட்டி பிரமாண்டமாக நடந்தது
அழகான பட்டங்கள் என்று சொல்லி
எல்லோரும் பட்டக்கூட்டம் பார்த்துக்கொண்டிருக்க
எல்லாப் பட்டமும் உன்னையே பார்த்துககொண்டிருந்தன
அடைமழை எட்டு நாளாகப் பெய்ததிற்கு
நீதான் காரணம் என்று ஊரெல்லாம்
உன் அம்மா சொல்லிக்கொண்டு திரிகிறார்
மழையில் நனைந்து; கால் நனைத்து
வெள்ளம் விளையாடியிருக்கிறாய் இதமாக
ஜலதோசம் பிடித்துவிடவே
அறைக்குள்ளே போர்வைக்குள் தூங்குகிறாய்
அதை அறிந்த மழை
அடுத்த கணமே
எங்கோ தொலைந்து போனது
உண்மைதான் என்பதை
வானிலை அறிக்கை சொல்லிக்கொண்டிருந்தது
குளிர் உன்னைப் பிடித்துப் புரள்கிறது
நீயோ குளிரில் நடுநடுங்குகிறாய்
இங்கே இப்ப
வீசத் தொடங்கிய குளிருக்கும்
நீதான் காரணம் என்று
உன் அம்மா சொல்லித் திரியக் கூடும்
-சமரபாகு சீனா உதயகுமார்