இருள் சூழ் நிலத்தை காலம் எழுதித் தீர்க்கிறது
இது போல் இருளை எழுதிக் கிழித்த விரல்களால்
இன்னும் எழுதிக் கழிக்க வருகிறது
ஊழி சூழ் பொழுது
மின்மினி ஒன்றின் துணை பற்றிச் சுற்றி ய நிலம் எம்முடையது
எறிகணைப் பொறி தழுவி தடமேறிய பொழுது எம்முடையது
பிணிமெரி தணல்தாவிக் கலைந்த பொழுது எம்முடையது
பொழுதுகளைத் தூரவீசி
வண்ணத்தின் மீதமர்ந்து
பீனிக்சைப் புணர்ந்தோம்
இன்னுங் காயவில்லை
குருதி வடிந்த பாதக்கூதிர்
பிறகும் புத்தன் புன்கண்ணீரை இறைக்கச்
சூழுரைத்தானே
ஓ எழுகதிரே
நீயுமா நிலவை ஒழித்து வைத்திருக்கிறாய்
காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளைப் போல்
காணாமல் ஆக்கிவிட்டாய் நிலவை
ஆனாலும் அனல் தின்ற நிலத்தின் பிள்ளைகளாய்
நம்பிக்கைச் சுடர்பற்றி
சுவாலிக்கிறோம்
சொற்றுணை வேதியன்
சோதி வானவன் துணை யென.
த.செல்வா