என் வீட்டு முற்றத்தில்
இரண்டு வானம் பாடிகள்
காலையிலே வந்தங்கே
காத்திருக்கும் என் தானியங்களுக்காய்……….
அகல விரித்த தன் இறக்கையை சூரிய ஒளியில் இதப்படுத்தி
உதடுகளை விரித்திருக்கும்,
பசி என்று காட்டிக்கொள்ள …
ஆடும் பாடும் பல கதை சொல்லிப் போகும் இதுவரை எதையும் நான் ரசித்தது இல்லை….
பருக்கையை உமிழ்ந்த பின்
சிலதை காவிச் செல்லும்,
மறுப்பதற்கு நான் மனித நேயமற்றவள் இல்லை…
நேற்று வந்தது……
இன்றும் வந்திருக்கின்றது……
நாளையும் வரும்……
மறு நாளும் வரத்தான் செய்யும்
தடுப்பதற்கு நான் வேலிகள் போட்டதில்லை
இருப்பினும் அதற்காய் நான் காத்திருக்க காரணம் இல்லை
நாலஞ்சு நாளதை முற்றத்தில் காணவில்லை…………
அன்றுதான் அதன் பாட்டும் கதையும் என் நினைவிற்கு வந்தது
எனக்காக அது காத்திருந்த காலங்கள் இரைமீட்டல் ஆகின……
சூரிய கூதலில் உதிர்ந்த இறகுகள் காற்றில் பறந்தன
காட்சிகளாய் அவற்றை கவனித்தேன்
தத்தித் திரிந்த கால் நடையை ரசிக்க தொடங்கியிருக்கின்றேன்
கிண்ணத்தில் பருக்கைகள் நிரம்பி வழியத் தொடங்கியிருந்தன
இருப்பினும் அது வரவில்லை…..
திடீரென காலடியில் ஏதோ அசைவதை பார்க்கிறேன்
பூனைக்கு இரையான
என் சிட்டின் சதைகளை எறும்புகள் காவிச் செல்கின்றன………………..
முல்லையின் ஹர்வி