செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கடவுள் இருக்கிறார் | சமரபாகு சீனா உதயகுமார்

கடவுள் இருக்கிறார் | சமரபாகு சீனா உதயகுமார்

3 minutes read

பாடாசாலையில், நேற்றைய காலைச் சாப்பாடு சுமாராகப் போனது. இரண்டு ரொட்டித்துண்டும், செத்தல் மிளகாய் சம்பலும்தான்.

ஓரளவு பெரிய ரொட்டியாக இருந்தாலும், இரண்டு ரொட்டிகள் போதுமானதாக இருக்க வில்லை.

ஆனாலும், கன்டீன்கார அம்மாவோ, ஒருவருக்கு இரண்டு ரொட்டிகள் மாத்திரமே தருவேன் என்ற எழுதாத சட்டம் ஒன்றை கொஞ்ச நாளாக நிலை நாட்டியிருந்தார்.

காலத்தின் தேவை அறிந்து நாமும் அதை சமாளிக்க பழகினோம்.

கன்ரீன்கார அம்மாவால் என்ன செய்ய முடியும். சாப்பாட்டு பொருட்கள் எதுவும் இல்லை. இருந்தாலும் நிமிசத்துகொரு விலை ஏற்றம். கிடைக்கிறதை கொண்டு வாடிக்கைக்கார ஆசிரியர்களையும், மாணவர்களையும் சமாளிக்க வேண்டும் என்பது அவரின் நேர்மையான நிலைப் பாடு.

மத்தியான நேரம் தண்ணீர் குடித்து வயிறு நிரப்ப பலருக்கு விருப்பம். மின்சாரமும் அடிக்கடி கட்டாகிப் போகுது. தண்ணித் தொட்டிக்கு ஒருக்கால் மாத்திரம் தண்ணீர் ஏற்ற முடியும். தண்ணியும் பற்றாக்குறயாக இருந்தது.

அண்டைக்கும் காலைப்பிறேயரில் மூன்று பிள்ளைகள் மயங்கி விழுந்துவிட்டனர்.

கன்ரீன்கார அம்மா ஆத்தித்தந்த தேத்தண் ணியை பிள்ளைகளுக்கு கொடுத்தோம்.

ஒரு பிள்ளை மயக்கம் தெளிந்து எழுந்து இருந்தது. மற்றைய இரண்டு பிள்ளைகளும் மயக்க மாகக்கிடந்தனர்.

நல்லகாலத்திற்கு ஓர் ஆட்டோ தெருவால் போய்க்கொண்டிருந்தது.

கை காட்டிக்கூப்பிட ஆட்டோக்காரன் பறந்தோடி வந்தான். பிள்ளைகளை ஏத்திவிட்டு, இரண்டு ஆசிரியைகளையும் அனுப்பி வைத்தோம்.

வைத்தியசாலையில் டாக்குத்தர் பிள்ளைகளை செக்பண்ணிவிட்டு சொன்னார்,

“பிள்ளைகள் நேற்றிரவும், இண்டைக்கு காலையிலும் ஒண்டும் சாப்பிடவில்லை. நல்ல காலம் கெதியாகக்கொண்டு வந்து சேத்துப்போட்டியள்”, என்று.

ரீச்சர் ஆட்டோக்காரனை பார்த்தார். ஆட்டோக்காகாரன் தெய்வமாகத் தெரிந்தார்.

ஆட்டோக்காரனுக்கு காசு கொடுக்க பேர்சை எடுத்துத் திறந்தார். “ரீச்சர் காசு வேண்டாம். பிள்ளைகள் சுகம் வந்தது பெரிய புண்ணி யம்” என்று சொல்லிவிட்டு கிளம்பிப்போ னார்.

பெற்றோல் தட்டுப்பாடான, பெற்றோல் விலை அதிகமான இந்த்காலத்தில், இப்படியொரு மனித நேயமான மனிதரைக் கண்டது ஆச்சரியமாக இருந்தது.

பள்ளிக்கூடம் விட்டு மூன்று கடைகள் ஏறி இறங்கினேன். எங்கேயும் சாப்பாடு கிடைக் கவில்லை.

“இன்னும் மூண்டு நாலு நாளையில கடை கள் பூட்ட வேண்டி வரும்போல, காஸ், கரண்ட், சாப்பாட்டுச் சாமான் ஒண்டு மில்லாமல் கடையை நடத்தெண்டால் எப்படி நடத்திறது.” அலுத்துக்கொண்டு சொன்னா ர்.

இரண்டரைக்கு மணிக்கு மேல ஆச்சு. வீட்டுக்கு வந்து வீட்டுக்கார ஐயாவை தேடினேன். ஐயாவை காணவில்லை. என்ர ரூமுக்கு வந்து உறங்குவம் எண்டு நினைத்து கட்டிலில் சாய்ந்தேன்.

கெட்டகாலத்திலும் ஒரு நல்லகாலம். கரண்டிருந்ததால் பான் வேலை செய்தது.

கொஞ்சம் கொஞ்சமாக உறங்கிக்கொண்டு இருந்தேன். அரைவாசிக்கு மேலே உறக்கம் வந்திருக்க வேண்டும்.

“மாஸ்ர்… மாஸ்ர்…” என்று ஐயா வெளியே கூப்பிட்டுக்கொண்டு நின்றார்.

திடுக்கிட்டு எழும்பி, ஆத்துப்பரக்க வெளியே ஓடி வந்தேன். வெளியே ஐயா ஒரு பார்சல் சோறுடன் நின்று கொண்டிருந்தார்.

“அந்தியேஸ்ட்டிக்குப் போனன். ஒரு பார்சல் சோறு தந்தாங்கள். நான் சாப்பிட்டன். இதை நீங்கள் சாப்பிடுங்க” என்று சொல்லி தந்து விட்டு போனார்.

இறந்தது ஆணோ, பெண்ணோ என்று ஐயாவிடம் நான் விசாரிக்கவில்லை. எது வெண்டாலும் அந்த உயிர் சாந்தி அடைய வேண்டுமென கடவுளிடம் வேண்டினேன்.

(யாவும் உண்மை)

-சமரபாகு சீனா உதயகுமார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More