நிலவின் கொடி அசைத்து
நீலக் கடலுடுத்தி
பறந் தலைந்தேன்
இள நங்கை பொன்னகை உதிர்த்தி
எனை அணைத்தாள்
காற்றின் கந்தர்வத்தில் அவளும் நானும் சுவாச புணர்வில்
புன்னகை குளித்தோம்
நிலவுக்கென்ன வேலை
அவள் சொல்ல
கொடி கழற்றினேன்
கடலை எதற்குடுத்தாய்
உடையைக் அவிட்டலர்ந்தேன்
நிர்வாணித்த எனை
நெஞ்சுருக நீந்தென்றாள்
நீந்தினேன் முத்தங்களைப் படகாக்கி
அவள் மலைகளின் மகரந்த மலர்களில் கரமோடி
அவள் கால்வரை விரகமானேன்
அவள் அத்துணை வசீகரமோ கேள்வியானான் இராமன்
ஆம் ஆமென்றேன்
யாரென்றான், எங்கென்றான்
பூவோ புயலோ என்றான்
அவள் பெய ரேதென்றான்
ஈழமென்றேன்
எங்கள் இளமங்கை யென்றேன்
கங்கை போல் மகாவலியென்றேன்
கிளிகள் பறக்கும் நொச்சி யென்றேன்
யாழ் மீட்டும் பாண னென்றேன்
முல்லை பூத்த தீவு என்றேன்
மீன் பாடும் களப்பு என்றேன்
வாசமேகும் இனியா என்றேன்
வன்னி யெனும் புவனா என்றேன்
பதிலானான் இராவணன்!
ஈழமங்கை இழிந்து போனாள்
கன்னியவள் கற்பிழந்தாள்
சிங்க மைந்தன் கை நனைத்தான்
வெடுக்கு நாறி என்றுரைத்தான்
ஆடும் சிவ தாண்டவத்துள்
ஆகாயம் பதிந்து அனலைக் கொட்டுக!
ஆடும் ருத்ர தாண்டவத்தில்
விஜய மகவு மண்ணுள் புகுக!
சபித்தான்
ஈழக் கலவி பற்றும் பாவலத் தமிழி ஒருவன்
த. செல்வா