கூன்விழுந்த கோன்குதிக்கும் எங்கள்நிலம் மீதில்;
வான்விழுத்தும் மழைவரிசை வந்துவிழும் போதில்;
நான்முழுதும் நனைந்தகவி நயனமது திறந்தே;
‘ஏன்வானே கொட்டுகிறாய் எடுத்தெறிந்து?’ என்றேன்.
“கோனுயராக் குடிதாழும் கொள்கைமணி
நாட்டில்
வானுயர்ந்தா பயிர்விளையும்? பசுபொழியும் மேட்டில்?
தானுயர்ந்தால் போதுமெனச் சாதுக்கள் அலைந்தே,
ஊன்நாடி உள்ளமதை விட்டதனால் விழுந்தேன்!”
‘நிலம்நனைய நீயிருந்தால் நீளும்வளம்!’ என்றேன்;
“பலமதுவே பௌத்தமென நிலமகளைத் திருடி;
உலவுகின்ற பன்சலைகள் ஊரறியும் மகனே!
பலமெனவே பாறியவை பள்ளமிட வந்தேன்!!!”
‘பொய்த்தாயோ என்றிருந்தேன், போற்றும்வகை செய்தாய்!’
“மெய்க்கவியே! என்மகனே! மேன்மையது சொல்வேன்!
பொய்க்காத உன்னறத்தை இதுவரைநீ என்றும்,
தைக்காத சொல்லெடுத்துப் பாடுயிது நேரம்!”
ஐம்பூதக் கழல்போற்றி! அருமழைத்தாய் வாழ்க
எய்கின்றேன் சொல்லையிதோ எரிந்ததுவோ பாய்ந்து
பொய்த்தூபி பொசிந்தெரிந்து பொடிப்பொடியாய்ப் போகும்
மெய்யேயென் வேலவனே சொல்லிதனில் வாழ்வான்.
| செ.சுதர்சன்