விரல்களை இறுகப் பொத்தி புடைத்தெழும் ஆணின் கைகள்
உழைப்பாளர் தினத்தின்
குறியானபோது
அதை ஏன் கொண்டாட வேண்டும்?
அதுவோர் மரண வீடு!
அந்தக் கைகளின்
வீரியத்துக்குப் பின்னால்…
மறைந்துகொண்டே,
ஆயிரம் அம்மம்மாக்களதும்
ஆயிரம் அம்மாக்களதும்
ஆயிரம் மனைவிகளதும்
ஆயிரம் மகள்களதும்
ஆயிரம் பேர்த்திகளதும்
உடலும் உயிரும்
உழைத்துக்கொண்டே இருக்கின்றன!
“உயர்த்துங்கள் தோழன்களே
உரிமைக்காய்க் கரங்கள்” என்றேன்
‘அதென்ன புதிதாய் தோழன்களே?’
என்று ஏன் பேசிக் கொதிக்கிறீர்?
தோழிகளும்
“தோழர்களே திரண்டெழுவோம்” என்றார்கள்.
அதனால்….
‘ஆணாதிக்க AC இல் (Air condition) கொதிக்கிறீர்கள்’ என்றேன்!
தோழிகளின் புடைத்தெழும் கைகளின்
வீரியத்தில்….
அப்பப்பாவின்
அப்பாவின்
கணவனின்
மகனின்
பேரனின்
அரியாசனக் காட்சிகளைக் காண்கிறேன்!
நான் ஒருபோதும் காணவே இல்லை!
அம்மம்மாவின்
அம்மாவின்
மனைவியின்
மகளின்
பேர்த்தியின்
அயரா உழைப்பை…!
ஆனாலும்,
அவர்கள் வாயோ
ஆண்களின் உழைப்பை
உழவன் என்றது!
மறவன் என்றது!
அம்மாவையோ
‘வீட்டில் சும்மா இருக்கிறா’
என்று சுட்டு வீழ்த்தியது!
அவர்கள் காட்டும் படங்களிலோ…
புடைத்தெழும் புரட்சியின் ஆண் கை!
ஆண் கையில் சுட்டியல்!
ஆண் கை தூக்கும் அரிவாள்!
ஆணின் கை நெற்கொத்தின் தலையைப்
பற்றி அறுக்கும் வேகம்!
ஆண் கை அறுத்து எறியும்
விலங்கும் சங்கிலியும்….
இன்னும் இன்னும்…
உழுவதற்கும்
விதைப்பதற்கும்
இறைப்பதற்கும்
வெட்டுவதற்கும்
மெஷின்கள் வந்த பின்பும்…
இன்னும் வரும் என்று
அறிந்த பின்பும்…
ஆணின் கை…. ஆணின் கை…!
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
என் அம்மம்மா…
உடைந்து போன சிரட்டைத் தலையோடு
ஒரு அகப்பைக் காம்பை
கூரை பிய்ந்து ஒழுகும் அடுப்படியில்…
இப்போதும் பிடித்தபடி இருக்கிறாள்!
தூக்கி எறிய முடியாவிட்டாலும்…
காலை முதல் மாலைவரை
அவள் கையில்
இப்போதும் அதுவே கலப்பையாய்…
யாருக்காக…?
அம்மாவுக்கும்
மனைவிக்கும்
மகளுக்கும்
பேர்த்திக்கும் என
இன்னுமா…?
யாருக்காக…?
———————————-
செ.சுதர்சன் 01.05.2023