தாயென்னும் தத்துவத்தைத்
தந்தவனை வாழ்த்துதற்குத்
தனித்து ஒரு தினம் போதுமோ?
சேய்கள் தமைச் செதுக்கியவர்
சிற்ப்பாக வாழ்வைக்கச்
செய்யும் தவம் சொலப் போதுமோ?
நோய் பிணியில் நம்மருகில்
நீங்காது துணையிருக்கும்
நோன்புதனை ஏற்று நிதமும்
சோதனைகள் சவால்களெலாம்
சுட்டெரித்துச் சுகம் கொடுக்கும்
சாதனையை ஆற்றி மகிழும்
பேரறிவும் பேரன்பும் பேரறமும் தான் கொண்ட
பெற்றோரை மறத்தல் தகுமோ?
கோயில் பலவிருந்தாலும்
கும்பிட்டு மேன்மைகொள
வேறு தெய்வம் உளதாகுமோ?
சாயலிலிலே சிவசக்தி
யாயெமது கண்முன்னே
யாம் கண்ட தாய் தந்தையை
வாழுகின்ற நாள்முழுதும்
வந்தனை செய்தே யவரை
வழிபட்டுப் பணியாற்றியே
வாழ்வதனை வளமாக்கும்
வரலாற்று மரபுதனை
வழுவாது நாம் காப்பமே!
புலவர் சிவநாதன்