அமெரிக்காவில் ஜூன் 30 பெட்னாவின் 36ஆவது விழா ஆரம்பமாகியுள்ள நிலையில், அந் நிகழ்வில் நேரடியாக கலந்துகொள்ள முடியாத நிலையில் இணையம் வழியாக இலங்கை கவிஞர் தீபச்செல்வன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத வகையில் தீபச்செல்வனுக்கு அமெரிக்கத் தூதரகம் வீசா மறுத்தமை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் சமூக வலைத்தளம் வாயிலாக அவர் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில்,
“வட அமெரிக்க தமிழ் சங்கத்தின் பாரம்பரியம் மிக்க 36ஆவது தமிழ் விழா இன்று கலிபோனியா மாநிலத்தில் ‘தொன்மை தமிழரின் பெருமை’ என்ற தொனிப்பொருளில் துவங்குகிறது. இந்த நிகழ்வில் விருந்தினராக கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதும் பேரவை நண்பர்கள், மிக வருத்தம் அடைந்தனர். என்றாலும் என்ன? வரும் காலத்தில் கலந்துகொள்வோம் என்று பேரவை நண்பர்களிடம் தெரிவித்தேன்.
பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துகொள்கின்ற நிலையில், உலகத் தமிழ் மக்களின் பல்வேறு பண்பாட்டம்சங்களை வெளிப்படுத்தும் பெட்னாவின் வருடாந்த விழா, ஒடுக்கப்பட்ட ஈழத்து மக்களின் உரிமைகளையும் வாழ்வு நிலைகளையும் பேச ஒருபோதும் தவறுவதில்லை. இம்முறையும்கூட உலகத் தமிழ் அரங்கத்தில் ஈழத் தமிழர் விவகாரம் பேசுபொருள் ஆகிறது.
என் எழுத்துப் பயணத்தில் மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்ட வட அமெரிக்க தமிழ் சங்கம், கடந்த காலத்தில் மெய்நிகர் வழியாக என் எழுத்துக்கள் குறித்த கவனம் மிக்க உரையாடல்களையும் நிகழ்த்தியிருந்தது. தமிழின் தொன்மையை வலியுறுத்தும் தொனியில் இடம்பெறும் இந்த ஆண்டு விழாவில் ஈழத்தின் தொன்மை முகமும் மிளிரும். பெட்னா 36ஆவது விழாவுக்கு வாழ்த்துகள்… ” என்று குறிப்பிட்டுள்ளார்.