என்னை இந்த தேசத்தவன் என அழைக்காதீர்கள்
நான் வந்த கப்பல்
குமரிக்கண்டத்தில் புதைந்துகிடக்கிறது
இலெமூரிய கண்டத்தின் வந்தேறி
முருகனோடு கதிர்காமத்தில்
குடியேறினேன் யாருமற்ற இந்த
குமரிக்கண்ட மிச்சத்தில்
சிறுபான்மை என்றே என்னை அழையுங்கள்
இங்கே வசிக்கும் எறும்புகளை விட நாங்கள் குறைவுதான்
என் நிறத்தைப் பார்த்து என்னை அடையாளம் கண்டு விடுவீர்கள்
அதை மாற்ற எந்த நிறக்கழிம்பும் நான் பூசுவதில்லை
மனதை மாற்றாத மற்றவர்கள் முன்னே எனக்கு நிறத்தை மாற்ற பிடிக்கவில்லை
அதனால் என்னை கறுப்பன் என்றே அழையுங்கள்
இந்த நாட்டை உருவாக்கிய என் முன்னோர்களை மூடிய
புதைகுழிகளில் செழித்து வளர்ந்த
அறுபடையை சுவையுங்கள்
அதில் எங்கள் இரத்தமும் வியர்வையும் மணக்கும்
அதையும் சேர்த்து வந்தேறி என்றே அழையுங்கள்
என்னை சுற்றி ஆக்கிரமித்த
அரசின் அதிகார மரங்கள்
என் உடலை மூடி மறைத்தாலும்
இருக்கும் சிறு துவாரத்தின் ஊடாக
இந்த இலெமூறிய வந்தேறியின் குரல் கேட்க்கும்
வட்டக்கச்சி வினோத்