நான் இங்கிருக்கிறேன்
ஆனாலும்
நான் இங்கில்லையென்பது
எனக்குமட்டுமே தெரியும்.
பூஞ்சோலையைப் பிரிந்த
பூஞ்சிட்டெனப்
பாலைவெளியெங்கும்
பதைத்தலைகிறது மனது.
வனாந்தரமிழந்த களிறாய்
எதையோ தேடியலைந்து
திரியும் என்னில்
அச்சமுறுகின்றன முகங்கள்.
தூண்டில்களிடமிருந்து
குஞ்சுமீன்களைப்
பாதுகாக்கத் துடிக்கும்
பெருங்கடலாய்க்
குமுறி அழுகிறது உயிர்.
சினங்கொண்ட காற்று
பெருஞ்சுவரை மோதுவதுபோல்
தடைகளை உடைத்தெறியப்
பெரும்பாடு படுகிறது அறிவு.
கைவிடப்பட்ட தோணி
அலைகளில் அடிபடுவதுபோல
சொல்லடிபட்டுச் சிதைகிறது
நிகழ்காலம்.
நிலத்திலிருந்து
பிரிக்கப்பட்ட சிறுசெடிபோல்
புதிதாய் பதியமறுக்கும்
சுவடுகள்.
சிறுவனின்
கையிலிருந்து வழுவி
சுழன்று சுழன்று
பறக்கின்ற பலூனாய்
மேலேறுகின்றன
கனவுப் படலங்கள்.
இலைகள் சொரிந்த
குளத்தின் கரைகளில்
காரை பெயர்ந்த
குடிசை வீடுகளில்
தனித்திருக்கும் ஒரு
தாயின் மடியினில்
பழங்களை விறகும்
முதியவர் அருகினில்
அங்கே இருக்கிறேன்
நான் இங்கில்லை.
ஆதிலட்சுமி சிவகுமார்.