வில்வரசன் கவிதைகள்
இருளிரவு
விடுதி அறையில்
நித்திரைத் தூக்கத்தில்
குறட்டை ஒலிகளைத்
தாண்டியும்
கிசு கிசுக்கின்றன
தோழர்களின் காதல் அணுங்கல்கள்.
பகிரப்படும் முத்தங்களில்
பரிமாறப்படும் நேசங்களில்
திணறிப் போகின்றன
செல்போன் அலைகள்
நாகரிகம் கருதி
கண்களை மூடி
காதினை அடைத்து
நெற்றிப் பொட்டில்
நிறுத்திப் பார்க்கிறேன்
எனக்காக ஒருத்தியை
இப்போது
இன்னும் இன்னும்
கூர்மையடையத் தொடங்குகிறது
நள்ளிரவு இருள்
02 பிரியாவிடை
கல்லூரியை விட்டுப் பிரியும்
நாளில்
நண்பர்கள் எல்லோரும் கட்டி அணைக்கிறார்கள்..
“மறக்காமலிரு ”
“கல்யாணத்துக்கு கூப்பிடு”
“எப்போதும் தொடர்பிலிரு ”
இப்படித்தான்
தொக்கி வீழ்கின்றன
துயர வார்த்தைகள்
எல்லோரிடமிருந்தும்
விடைபெற்ற பிறகும்
மிச்சமாய் இருக்கிறது
விடைபெறுதலொன்று..
சந்திக்கவுமில்லை..
பேசவுமில்லை…
கண்ணீர் விடவுமில்லை…
ஆயினும் விடைபெற்றுக்கொள்கிறோம்
நமக்குள்
அறிவித்துக் கொள்ளாமலே