•
உதிரவாசனை உட்பெருகும் காட்டில்
நிதம்ப உருக்கொண்டு பூக்களும்
தியானம் செய்கின்றன
வெட்டுப்பட்ட மரப்பட்டைகளுக்கு இடையே பதறும் முகங்கொண்ட மூதாதையர்கள் புலம்புகிறார்கள்
மலைக்குகைகளெங்கும் பாறைகள்
மனித உணர்வுகளிலே
சித்திர சுருபங்களாகி வளருகின்றன
திசையெல்லாம் காண்பதாய் மரச்சதையெங்கும் கண்கள் முளைக்க
நிற்கும் பெருங்கிளைகள்
இசையெல்லாம் கேட்பதாய் காதுகளாகவே சாயும் பள்ளத்தாக்குகள்
பெண்ணின் கருணைதான்
மக்கிப்போன யாவற்றிலும் கூட செயலாகிறது
இயற்கை பெண்
வனநீலி துடிகொள்கிறாள்
உடல்வேண்டி உடல்வேண்டி
இரத்த தாகம் எடுத்தால்
என் அகம்கொய்து அகம்கொய்தே
உயிர்ச்சங்கு படைப்பேன்
தாய் ~நிதம்தின்று – நிதம்உண்டு
உலகு காண் என்று துடிப்பேன்
எதிலும் உயிர்கண்டு உயிர்கொண்டு
என் உளச்சாரல் பிடித்தால்
அறம்கொண்டு அறம்வென்று
நயம்யாவும் அருள்வேன்
என்று பாடிச்செல்கிறாள்
மலையூற்று அவள் கண்ணீர்
அதில் பெருகுவதெல்லாம்
நம்பா நெஞ்சத்து மக்களுக்கும்
மரகதமலை மார்பே மொழியும் அமுதும்
என்பதுவே !
தேன்மொழி தாஸ்
6.1.2021
3:31 am