ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வியின் எழுத்துக்கள் பொன் விழா காணும் நிலையில் இது குறித்த மெய்நிகர் விழா ஒன்றிணை வணக்கம் இலண்டன் இணையம் ஏற்பாடு செய்துள்ளது.
வணக்கம் இலண்டன் இணையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல நிகழ்வுகள் இடம்பெற்று வரும் வரிசையில், ஈழத்தின் மூத்த படைப்பாளி தாமரைச்செல்வியின் ஐம்பது ஆண்டுகால எழுத்துலகப் பயணம் சிறப்பிக்கப்படவுள்ளது.
ஈழத்தின் கிளிநொச்சியை சேர்ந்த புகழ்பூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வி, பச்சைவயல் கனவு, மற்றும் வன்னியாச்சி சிறுகதை தொகுப்பின் ஊடாக பரவலாக அறியப்பட்டவர். ஈழத்தின் பெண் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவராக கருதப்படும் இவர், 1973 முதல் சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதிவருகின்றார். இவருக்கு இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.
சுமைகள், தாகம், வீதியெல்லாம் தோரணங்கள், பச்சை வயல் கனவு முதலிய நாவல்களையும் மழைக்கால இரவு, அழுவதற்கு நேரமில்லை, வன்னியாச்சி முதலிய சிறுகதை தொகுப்புக்களையும் எழுதியுள்ள தாமரைச்செல்வியின் உயிர்வாசம் நாவலுக்கு இலங்கை அரசின் சாகித்திய விருது வழங்கப்பட்டமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி இன்று இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் ஈழத்தின் இலக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு உரைகளை ஆற்றவுள்ளதுடன் நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்களும் தமது வாழ்த்துகள் மற்றும் கருத்துக்களையும் பகிரலாம்.