கடலலை சூழும் மீழக்
கண்மகிழ் ஈழ நாட்டில்…
தடல்புட லாக நாளும்
தளைத்திடும் செய்தி பாரும்!
மடலிது உமக்கே என்று
மனதினை வைத்தோர் செய்தி;
விடலதே கருமம் ஆகும்!
விடுகிறேன்! விடுப்புக் கேளும்…!
நீதியை வேண்டா; நீளும்
நிம்மதி வேண்டா; நியத்தில்
பாதியும் வேண்டா; பண்பில்
பனித்துளி தானும் பாரில்
ஓதியும் வேண்டா; ஒளியாம்
ஒற்றுமை வேண்டா; எல்லாம்
நாதியாய்ப் போகும் நாடே…
நாமுள்ள ஈழ நாடாம்…!
புத்தரும் வந்தார் என்றோம்!
புனிதனாம் காந்தி கூட…
இத்தரை மிதித்தார் என்றோம்!
ஈடிணை இல்லாத் தாகூர்
இத்தினம் வந்தார் என்றோம்!
ஆயினும், நாட்டில் நீதி
நித்தமும் சாதல் எண்ணி
நிலமிதை நீங்கக் கண்டோம்!
மாவலி பாயும் நாட்டில்
மதிப்புடன் உள்ளோம் என்றா
ஆவலாய்ச் சொல்வோம்? ஐயோ!
அவதியும், அழிசெய் வரியும்,
பாவமாய் விளைந்து; பாட்டின்
வரியதில் கூட வரிகள்…
தாவலாம் என்றே நாமும்
தப்பியே ஓட்டம் கண்டோம்..!
ஆட்சியில் இருப்போர் எங்கள்
ஆவியை உண்ணலானார்!
நீட்சியாய் நீதி இல்லா
நிலமையில் தள்ளலானார்!
காட்சிகள் தீர்ந்து காலை
கனியுமே என்றிருந்தோம்!
மீட்சியே இல்லை என்று
மீள்கிறோம் மண்ணை விட்டே!
துவக்கது கடலாய்ச் சூழ்ந்த
துயர்மலி ஈழ நாட்டில்;
பவச்சுர மலைகள் ஓங்கி
பயந்தரு ஈழ நாட்டில்;
உவப்பதாய் ஏதும் இல்லை…!
உயர்ந்ததோர் மகிழ்ச்சி இல்லை..!
தவத்திரு மண்ணும் போச்சே…!
தப்பலே வழியும் ஆச்சே..!
இங்கொரு மலையில்… நல்ல
ஈசனின் பாதம் என்றோம்!
அங்கொரு ஏழ்கி ணற்றில்…
:அற்புதம்’ , ‘ஆஹா’ என்றோம்!
உங்கொரு குகையில் ஊர்ந்தால்..
உள்ளபேர் இருளே என்றோம்!
எங்குமே ஏங்கிக் கொண்டேன்…
ஏதிலிப் பிரஜை ஆனோம்!
நீதியே பதியும் நாட்டின்;
நீதியின் பதியும் போன,
சேதிகள் கேட்டோம்! அன்று
செய்வது தெரியா ஓடும்
பேதியைக் குடித்தவர் போல்
பேதையர் ஆகி நின்றோம்!
வீதிகள் தோறும் ஏசும்
விருப்பிலா நாட்டை விட்டோம்!
பதிபதி என்றே கூவி
பதுக்கிய கோழி தன்னை;
கெதியது வாக முட்டை
கேட்டுமே போடக் கெஞ்சும்;
விதியது வாக எங்கள்
விருப்பமும் நீளலாச்சு…
கதியது கடலைத் தாண்டும்
கனவுமே வழியென் றாச்சு!
இலங்கையே அழியும் என்று
இலங்கினி முன்பே சென்றாள்!
கலங்கியே நின்ற சீதை
காதலன் வருவான் என்றாள்!
விலங்கினைப் பூட்டு முன்பே
விருப்புடன் நாட்டை நீங்கி
நலங்களே இல்லை என்று
நாமுமே விடையும் கொண்டோம்!
செ.சுதர்சன்
07/10/2023