0
வயல் நிலத்திலே படை தரித்தனர்!
வாழ் புலத்திலே பகை விரித்தனர்!
அயல் விரட்டியே; பொருள் சுருட்டியே;
ஆரும் அற்றவூர் அதைப் புரட்டினர்!
நின்று ஓங்கிடும் பனை பறித்தனர்!
நீளநீளமாய் அதைத் தறித்தனர்!
அன்று கம்பிமுள்; கொண்டு கட்டியே;
அன்னை மண்ணில் எம் கால் மறித்தனர்!
பள்ளி மீதிலும் கொள்ளி வைத்தனர்!
பாதை எங்குமே கண்ணி வைத்தனர்!
அள்ளி முத்தமே; இட்ட மண்ணதை;
அரசு மண் எனச் சொல்லி வைத்தனர்!
வீதி எங்குமெம் வாழ்வு நின்றது!
விண்ணை எம் குரல் இடித்து நின்றது!
பேதி உண்டதோர்; வாழ்வு தந்த பேய்;
பெற்ற எம் நிலம் உண்டு நின்றது!
பச்சை ஆயிரம் பயிர் வளர்ந்ததாம்!
பாடும் ஆயிரம் கொடி மலர்ந்ததாம்!
கச்சை கட்டியே; களை பிடுங்கியே;
காதலித்த எம் நிலம் தொலைந்ததாம்!
சுட்ட பனம்பழச் சுவையும் கிட்டுமா?
சுண்டங் கத்தரிக் கறியும் கிட்டுமா?
வட்ட வட்டமாய்; கூடி உண்டிடும்;
வாழ்வு தந்த மண் இன்று கிட்டுமா?
கூழ் குடித்த எம் குந்திருக்குமா?
குஞ்சி றால் நிறை குழம்பிருக்குமா?
ஆழ் கிணற்றிலே; அள்ளும் நீரையே;
அமுதம் என்ற வாய் அங்கிருக்குமா?
பச்சை காய்கறித் தோட்டம் என்னவோ?
பாவற் கொடியொடும் பயிற்றை என்னவோ?
வைச்ச பாத்தியில்; வாளை உருவியே;
வயிறு கலக்கிய வெருளி என்னவோ?
மட்டை அள்ளிய மனைகள் உள்ளதோ?
மாடு மேய்த்த மண் மடிகள் உள்ளதோ?
கட்டை போகுமுன்; கண்கள் மூடுமுன்;
காண எண்ணிய காட்சி உள்ளதோ?
காலகட்டி எம் காலம் தாண்டினோம்!
கண்கள் துஞ்சிடாக் கனவில் தூங்கினோம்!
தோலகட்டி மண்; தொட்டு மீளவே;
தொஞ்சும் உள்ளமே தோளில் தாங்கினோம்!
செ. சுதர்சன்
—- 08/10/2023 —–