காசாவின் நிலவறைகளில்
பதுங்கியிருக்கும்
குழந்தையின் கண்களில்
விரிகின்றது
ஈழத்தின் இறந்தகாலம்
சுடுகலன் முனையில்
குருதியை உறிஞ்சியபடி
முன்னேறும் டாங்கிகளின்
பாதங்களில் நசியும்
முகங்களில் ஒன்றாய்
எனது தோழனின் உருவமும்
கற்களையும் மணலையும்
வீசி எறிந்து
தங்கள் நிலத்தைக் கோரும்
குழந்தைகளை
கவ்விப் போகும் கழுகுகளாய்
போர் விமானங்கள்
துண்டிக்கப்பட்ட ஒற்றைக்கையுடன்
நிலவறையில்
மெழுகின் வெளிச்சத்தில்
போராடும் தன் மகனுக்காய்
ஒலிக்கும்
பெருந்தாயின் பிரார்த்தனை
தோழனே !
காசாவின் துயரம்
என்
கருப்பையின் வரலாறு
வில்வரசன்