ஐம்பதாமாண்டு தொடக்கம்
இன்றுவரை ஏதேனுமோர்
இடப்பெயர்வில் சிக்கியதுண்டா
கொதிக்கும் தாருக்குள்
கண்முன்னே உறவுகள்
மடிவதை கண்டதுண்டா
படகில் போனவர்கள்
துண்டு துண்டாக கரையொதுங்கியதைப்
பார்த்ததுண்டா
தாய் தந்தை முன்னே
சோதரிகளின் மானம் பறிபடுவதை
கைகள் கட்டப்பட்ட நிலையில்
கொதிக்கும் இதயத்தோடு கண்டு
கண்மூடியதுண்டா
விசாரிக்க அழைத்துச்சென்ற
அண்ணா வராமல் இன்னும் தேடியதுண்டா
பல்கலைக்கழகம்போன தம்பி
பத்தாண்டு தாண்டியும்
வரவில்லையென ஏங்கியதுண்டா
தேவாலயத்தில் விழுந்த குண்டில்
உடல்கள் சிதறிய உறவுகளுக்காக
தொழுததுண்டா
கோவிலுக்கு சென்ற குடும்பத்தை
புக்காரா குண்டுக்கு பறிகொடுத்ததுண்டா
பெண்ணின் மார்புக்கு நடுவே
புதைக்கப்பட்ட துப்பாக்கியை
தட்டிவிட்டு மார்பில்
குண்டேந்தி மடிந்த தந்தையரை அறிந்ததுண்டா
பெண்ணுறுப்பில் கைக்குண்டு வைத்து சிதைத்த
உண்மைகளை உணர்ந்ததுண்டா
தன் உறுப்புக்களை இழந்து
சிதைத்த முகத்தை மறைத்து
ஒற்றைக் காலோடும்
இல்லாத கையோடும்
சக்கர நாற்காலிகளில்
படுகின்ற துன்பத்தை கண்டு
கண்கள் கசிந்ததுண்டா
நிவாரண வரிசையில் நின்றதுண்டா
நிம்மதி இழந்து அலைந்ததுண்டா
படிக்கத் தெரிந்தும் படிப்பை இழந்ததுண்டா
பசிக்கு தண்ணீர் குடித்ததுண்டா
குடித்த தண்ணீர் குடலை அடையும்முன்
குண்டடிபட்டதுண்டா
காவல் அரணை கடந்ததுண்டா
உயிர்பயம் உடையை நனைத்ததுண்டா
நெற்றிப்பொட்டை அழித்து தமிழ்
அடையாளம் மறைத்ததுண்டா
அடையாள அட்டையை காட்டி
தலையாட்டி முன்னே தனித்து நின்றதுண்டா
சப்பாத்துக்காள்களில் நசுக்குப்பட்டதுண்டா
நீதி தேடி சென்றதுண்டா
சென்றவர்களை கொன்று வீதியில்
போட்டதை கண்டதுண்டா
அகதியாய் போன பின்னே
நாளிதழில் செய்தியறிந்து பதறியதுண்டா
நண்பன் இழப்புக்கு அழமுடியாது
நெஞ்சுக்குள்ளே சோகத்தை அடக்கியதுண்டா
இவைகள் எல்லாம் யுத்த களத்தில்
நடந்ததில்லை
இவைகள் நடந்ததால் தான் யுத்தம் நடந்தது
இதன்பின்னும் தமிழர் போரை நியாயமற்றது
என்பதில் நியாயமுண்டா
இதில் எதும் ஒன்றையாவது
அனுபவித்ததுண்டா
நீங்கள் பேசுங்கள்
நீயும் இந்த அடிமை தேசத்தில்
என் தோழன்
வட்டக்கச்சி
வினோத்