செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வில்வரசன் கவிதைகள்

வில்வரசன் கவிதைகள்

0 minutes read

1.வேட்டை

எல்லா மலைப்பயணங்களின் பொழுதும் எங்கிருந்தோ
எப்படியோ
வந்து சேர்கின்றது
அறிமுகமில்லா வேட்டைநாயொன்று

பயணத்தின் முழுமைக்கும்
வழிகாட்டியபடி நடக்கிறது
பாறைகளில் உட்க்கார்ந்து ஒய்வுகொள்கிறது,
இடைக்கிடை வாலாட்டவும்
அன்புடன்
முகம் உரசி முத்தம் தரவும் செய்கின்றது.

பயணம் முடிவில்
சொல்லிக்கொள்ளாமலே
விடைபெறுதலற்று
மறைந்து போகின்றது,
எப்போது இல்லாமல் போனது என்பதை
யோசிக்கும் கணத்திலெல்லாம் மெல்லிய பிறாண்டலுடன்
மௌன உறுமலுடன்
மனதுக்குள் இருந்து
குரைக்கிறது
அன்பெனும் விம்பமாக.

2. வனத்தாய்

அவ்வளவு இலகுவில்
கடந்து செல்ல முடிவதில்லை
அந்த தேக்கு மரங்களை
வீதியின் இருபுறமும் இலைகள் உதிர்ந்தும்
பட்டைகள் சிதைந்து
சன்னம் துளைத்து
எச்சமாய் நிமிர்ந்து நிற்கும்
தேக்க மரங்களை
அவ்வளவு இலகுவில்
கடந்து விட முடிவதில்லை

கார்த்திகை மலர்ந்தது.
வான்துளி முத்தத்தில்
துளிர்த்துக்கொண்டன காடுகள்
மீண்டும் பாடத் தொடங்கின வண்டுகள்.
மொட்டைக்குளத்தில் மலர்ந்த தாமரையின் பக்கத்திலிருந்து வாத்தியம்
இசைக்கின்றன தவளைகள்.

முகம் மறந்து போன
மறவர்களின்
நினைவுகளை மீண்டும் பாடத்தொடங்கின
நேசம் விதைத்த பெருமரங்கள்.

நெஞ்சத்தில் பொங்கி எழும் கண்ணீரை அடக்கி
அந்த வீதியின் இருபுறமும் புன்னகைத்து சிலிர்க்கும் காற்றின் வருடலில் தேங்கிக்கிடக்கிறது
ஓர் யுகக்கனவு

வில்வரசன்

* தேராவில் துயிலும் இல்லம் தாண்டி பயணிக்கும் பாதையில் வீதியின் இருபுறமும் உள்ள தேக்கு வனம் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More