ஓராண்டு நினைவு நாளில் திருவுருவச் சிலையை திறந்து வைத்து முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் புகழாரம்.
’வடமராட்சியின் பாரம்பரிய இசைக்குடும்பத்தில் தோன்றிய கருணாகரன் இசைமீது கொண்ட ஆழ்ந்த ஈடுபாட்டின் வழி இராம நாதன் துண்கலைகழகத்தில் பயின்று சங்கீதரத்தினம் பட்டம் ;பின்னர் சென்னை இசைக்கல்லூரியில் சங்கீத வித்துவான் பட்டம் பெற்றார். சங்கீத கலாநிதி மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் அபிமான சிஷ்யனாய் விளங்கினார்.
தேடல் நிறைந்த இசைக்கலைஞனாய் இள வயதிலேயே இசையுலகின் அங்கீகாரம் பெற்றார்.யாழ்ப்பாண பல்கலைக்கழக இராம நாதன் நுண்கலைக்கழகம் ,கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கல்வி நிறுவனம்,சிங்கப்பூர் இசைக்கல்லூரி ஆகிய நிறுவனங்களின் இசைப்பேராசானாகி பல மாணவர்களை உருவாக்கினார்.அவரிடம் பாடம் கேட்கும் பெரும் பேறு எனக்கும் வாய்க்க என்ன தவம் செய்தேனோ….’; தவில் இசைக்கு தட்சணாமூர்த்தி போல எங்கள் கர்நாடக இசைப்புலத்தின் உச்சமாக பெருமை சேர்ந்தார் ஏ.கே கருணாகரன்’ என தமது பிரதமவிருந்தினர் உரையிலே பேராசிரியர் அடிக்கோடிட்டார்.
சங்கீதவித்துவான் கருணாகரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியும் திருவுருவச் சிலை திறப்பு வைபவமும் அவர் பிறந்தகமான கரணவாய் கிழக்கு,கரவெட்டியில் ஓய்வு நிலை ஆசிரியர் இ.கருணாகரன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக யாழ்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி என் சண்முகலிங்கன் கலந்து சிறப்பித்து திருவுருவச்சிலையை திறந்துவைத்தார் . திருமதி வசந்தகுமாரி கருணாகரன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றினார்.
இராம நாதன் நுண்கலைப்பீட வருகை விரிவுரையாளர் பொன் ஸ்ரீ வாமதேவன்.
இசையாசிரியர் இசைக்கலைமணி திருமதி வாசஸ்பதி ரஜீந்திரன் , ( நல்லூர் சாரங்கம் இசை மன்ற இயக்குனர்) , இசையாசிரியர் இசைக்கலைமணி சாந்தகுமாரி கமலகாந்தன் ,வற்றாப்பளை மகாவித்தியாலயம்,இணுவில் ரசிகப்பிரியா சபா கலை வளர்ச்சி மன்ற தலைவர் வி.கே குகானந்தன் ஆகியோர் நிகழ்வின் சிறப்புவிருந்தினராக கலந்து உரையாற்றினர்.
இலங்கை ரூபவாகினி முன்னாள் பணிப்பாளர் சி.வன்னியகுலம்,ஓய்வு நிலை ஆசிரியர் க. லோகநாதன்,வங்கி முகாமையாளர் சி.கெங்காதரன்,,சக்தி கலாசாரமேம்பாட்டு மன்ற இயக்குநர் இரா மதிகரன்,கலாபூஷணம் சி.சிவஞானராஜா , கலாபூஷணம் வதிரிசி ரவீந்திரன் ,காப்புறுதி முகாமையாளர் வே பாஸ்கரன், ஓய்வு நிலை ஆசிரியர் தர்மசிறீ ராஜா,மாவட்ட பயிற்றுவிப்பாளர் பா முகுந்தன் ஆகியோர் நினைவுப்பெருரைகளை நிகழ்த்தினர்.