அன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை ஒரு ஆளுக்காக அடுப்பைப் பற்ற வைத்து மதிய சாப்பாடு சமைக்கணுமா? வேண்டாமே…! பேசாம ‘சுகி ‘ பண்ணிடலாம்னு நெனைச்சு சுகி பண்ணிக் காத்திருந்தார் சுப்ரமணி.
மதிய வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்தது. என்ன கர்மமோ தெரியலை..! குளிர்னா அப்படியொரு குளிர்!, மழைனா அப்படி ஒரு மழை!. வெயில்னாலும் அப்படி ஒரு வெயில்! சே! ‘சுகி’ போடலாம்னு, பக்கத்து ஹோட்டலாப் பார்த்துத்தான் போட்டார். ஆனாலும் அரை மணிக்கு மேலாச்சு. பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கிவிட்டது. காலைலயேயும் அடுப்பு பற்ற வைக்காத காரணத்தால் அக்னி வயிற்றில் புளியைக் கரைத்தது.
‘கீங்க்’ டூவீலர் ஹாரன் சப்தம். வந்தவர் செல் போன் எடுத்து ஆர்டர் செய்த சுப்ராமணியை அழைக்கும் முன் வாசலுக்கு ஓடினார். அங்கே வண்டியில் வயதானவர் ‘சுகி’ பனியனோடு சாப்பாட்டுப் பையை சப்ளைக்கு கையில் பிடித்தபடி காத்திருந்தார்.
‘சார் வயசானவன். வெயில்ல வந்திருக்கேன். ஏதாவது கொடுங்க’ என்றார்.
புரிந்தது. ‘ஜீபே’ பண்ணலாமா?’ என்றேன்.
‘வித் பிளஷர்’ என்றார். படித்தவர் போலிருக்கிறதே?! நினைத்துக் கொண்டே ஒரு நூறு ரூபாயை டிப்ஸாக ‘ஜீபே’ செய்து திரும்பினேன். மகள், என் போனைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, ‘உனக்கென்ன பயித்தியமாப்பா.?. நூற்றி முப்பது ரூபா சாப்பாட்டுக்கு, நூறு ரூபாயா டிப்ஸாக் கொடுப்பாங்க?! ஆத்துல போட்டாலும் அளந்து போட வேண்டாமா?!’ என்றாள் கடுப்பாக.
நான் நிதானமாகச் சொன்னேன். ‘ஹோட்டல்ல சாப்பிடறோம். கிச்சன்ல இருந்து ஹோட்டல்ல ஏசிரூம்ல உட்கார்ந்திருக்கற டேபிளுக்கு சப்ளை பண்றவனுக்கு டிப்ஸ் தரோமே? இவர் ஹோட்டல்ல இருந்து வேர்க்க விறு விறுக்க வெயில்ல வீட்டுக்குக் கொண்டாந்து தரார். வயசானவ வேற..! மானத்தை விட்டுக் கேட்டுட்டார். பெட்ரோலுக்காவது ஆகுமே? என்ன கஷ்டமோ தெரியலை! இந்த வயசுல ‘சுகி’ சுமக்கிறார்!’ என்றதும் மகள் மவுனமானாள். வெயிலைவிட உண்மை சுட்டிருக்கவேண்டும் என்பது அவள் ஒன்றும் சொல்லாமல் போனதில் தெரிந்தது.
– வளர்கவி
நன்றி : சிறுகதைகள்.காம்