பதியப்படாமலே தொலைந்து போன மேஜர் யெயசீலனின் கவிதைகளை படித்திருக்கின்றேன்.
ஆழமான நியமான வரிகள் .
போர்க்காலத்தின் மக்களின் வாழ்க்கை முறையை ,களவாழ்வை ,நோயை ,
நோயாளிகளை மண்வீதிகளை இன்னும் பலவற்றை பாடியிருந்தார்..
கள மருத்துவம் கற்பதற்காக எமது மருத்துவமனையில் நின்றிருந்த நாட்களில் கொப்பியில் மருத்துவ பாடங்களிற்கு இடையில் எங்கே சிறு வெளி கிடைக்கின்றதோ அங்கே ஹைக்கூ கவிதை எழுதிவிடுவார்.
சிறிது நேரம் கிடைத்தாலும்
கிறுக்கி விடும் வரிகளில் ஆழமான கருத்து பதிந்திருக்கும்
குருதி பற்றிப் படிப்பித்த பகுதியில் மிஞ்சியிருந்த சிறிய இடத்தில் இப்படி எழுதியிந்தது ,
என் நினைவிற்குள் இன்று மீண்டது .
“இரத்தானம் செய்ய
விருப்பம்
நுளம்பு முந்திக் கொள்கிறது
மலேரியா”
படித்து விட்டு பகிடியாக சொன்னேன் .நன்றாகவுள்ளது யெயசீலன் ஆனால் பரீட்சைக்கு கவிதைக்கு புள்ளியில்லையாமே ….
தலையைச் சரித்து ஒரு சிரிப்பு “அக்கா கவிதை புத்தகம் ஒன்று செய்யனும் ” இங்க இருந்து போக முதல் எழுதி முடிக்கனும் அங்க போனால் (போர்களத்திற்கு)பேனா எங்க பிடிக்கிறது ..”.
கவிதைகளை எழுதி அதற்கு தானே குறியீட்டு படங்களை வரையும் பழக்கம் யெயசீலனுடையது .
“இருளில் .
மீள உயிர்கொடுக்கிறது
சத்திரசிகிச்சை கூடம்”
“படுப்பதற்கு
நிலமில்லை
பாயில்
UNHCR”
“இது காயம்
தந்த சொந்தம்
வலி தீண்டும்
துன்பம் இன்பம்
கள நீளம் வரை
நீளும் இந்த சொந்தம்.”
விடுதலை நோக்கி
சிறகினையடித்து
விடைபெற்று -போன
போராளிக் கவிஞன்
ஜெயசீலன் நினைவில்…
மிதயா கானவி