இந்தமுறை லண்டனுக்கு நாங்கள் போன போது குளிர் இன்னும் போகவில்லை. மகளின் மேல்மாடி அறையில் படுத்திருந்த நானும் மனைவியும் காலையில் எழுந்த போதும் கீழே இறங்க முயலவில்லை. மகளும் மருமகனும் வேலைக்குப் போகும் அவசரத்திலும் பேரப்பிள்ளைகள் பாடசாலை செல்லும் பரபரப்பிலும்.
நாங்கள் யன்னல் அருகிலிருந்த கட்டிலின் விளிம்பில் இருந்து யன்னலால் வெளியே பார்த்தோம். பக்கத்து வீட்டு சிமித்தும் எலிசாவும் தமது காலை நேர நடைக்கு வெளிக்கிட்டார்கள். சிமித்திற்கு எழுபத்தேழு வயது, ஆனால் ஐம்பது வயது இளைஞர் போல எலிசாவை அணைத்து அழைத்துக் கொண்டு போனார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாங்கள் லண்டன் வந்த போது தான் சிமித்தினதும் எலிசாவினதும் ஐம்பதாவது திருமண நாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. திருமணம் செய்து தங்கள் பிள்ளைகளுடன் வேறு இடங்களில் வசிக்கும் அவர்கள் பிள்ளைகள் யாவரும் வந்திருந்து சந்தோசமாகக் கொண்டாடினார்கள்.
எங்களுக்கும் அழைப்பு வந்ததால் சிறிது நேரம் போயிருந்து மரியாதை நிமித்தம் வாழ்த்திவிட்டு வந்தோம். அப்போதெல்லாம் எலிசா ஆரோக்கியமாகவே இருந்தார். பின்னர் அவரது உடல்நிலை படிப்படியாக வீழ்ச்சியடைந்து இப்போது துணையின்றி நடக்க முடியாதிருந்தார். சிமித் அவரை அணைத்து அழைத்துச் சென்றது எங்கள் மனதை வருத்தியது.
வெளிநாடுகளிலிருந்து கேள்விப்படுவது போன்று அங்கு தம்பதிகள் எல்லோரும் விவாகரத்துப் பெற்று வேறு திருமணம் செய்வதில்லை. நாங்கள் பல குடும்பங்கள் ஐம்பது, அறுபது வருடங்கள் இணை பிரியாது வாழ்வதை அறிவோம். அப்போதெல்லாம் சிமித்தும் எலிசாவும் அடிக்கடி நண்பர்களுடன் விருந்து கொண்டாடுவதை நாங்கள் கண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் முதியோர்கள் ஒன்று கூடும் ‘சென்ரருக்குப்’ போய் இரவு முழுக்க நடனமாடி, பேசி மகிழ்ந்து அதிகாலையில் வீட்டிற்கு வருவார்கள். அப்போது எழுபத்தைந்து வயதிலும் சிமித் ‘குரூஸிற்கு’ வேலைக்குப் போவது வழக்கம். உல்லாசப் பிரயாணம் செய்யும் கப்பல் இரண்டு, மூன்று அடுக்குகள் கொண்டவையாகவும், உள்ளேயே பல நீச்சல் குளங்களும் பல உணவு விடுதிகளும் இருக்கும். உணவு கப்பல் கட்டணத்துடன் உள்ளடக்கப்பட்டாலும் மதுபான வகைகளுக்கு உடனுக்குடன் காசாகவோ கடனட்டை மூலமோ கொடுத்து விடவேண்டும்.
சிமித் அங்கேயுள்ள உணவகத்தில் பரிமாறுபவராக வேலை செய்வார். அவருக்குக் கிடைக்கும் சம்பளத்தை விட உல்லாசப்பயணிகள கொடுக்கும் ‘ரிப்ஸ்’ (சந்தோசப்பணம்) கூடுதலாக இருக்கும். இரண்டு மாதங்கள் கழித்து சிமித் திரும்பி வரும் வரை எலிசாவிற்குத் துணையாக அவரது சிநேகிதிகளில் ஒருவர் வந்து நிற்பார். சிமித கொண்டு வரும் பணத்தில் அவர்கள் அடிக்கடி விருந்துகள் வைத்து அசத்துவார்கள்.
எலிசாவிற்கு சுகயீனம் ஏற்பட்ட பின் சிமித் குரூஸிற்குச் செல்வதில்லை. திடீரென்று ஒரு நாள் ‘அம்புலன்ஸ்’ வந்து சிமித் வீட்டு வாசலில் நின்றது. எலிசாவை ‘ஸ்ரெச்சரில்’ வைத்து தூக்கி வந்து அம்புலன்ஸ்ஸில் ஏற்றினார்கள். இரண்டு நாட்கள் வைத்தியர்களின் அத்தனை முயற்சிகளையும் மீறி எலிசா இயற்கையடைந்தார். பார்வைக்கு வைத்த மண்டபத்தில் சென்று நாங்களும் அஞ்சலி செலுத்தினோம்.
சிமித் சில நாட்கள் நடைப்பிணமாய்த் திரிந்தார். பின் பழையபடி குரூஸ் வேலைக்குப்போய் விட்டார். நாங்களும் ஶ்ரீலங்காவிற்கு வந்து விட்டோம்.
அடுத்த வருடம் மீண்டும் நாங்கள் லண்டன் சென்ற போது பக்கத்து வீட்டில் பெரும் கொண்டாட்டம். எழுபத்தேழு வயதான சிமித் எழுபத்திரண்டு வயதான மேரியைத் மறுமணம் முடித்திருந்தார் . அன்று அவரதும் எலிசாவினதும் பிள்ளைகளும் மேரியின்பிள்ளைகளும் தங்கள் பெற்றோரின் மகிழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார்கள்.
இத்தனை வயதில் அவர்கள் திருமணத்திற்கு பாலுறவு காரணமாக இருக்க முடியாது. ஒரு பேச்சுத் துணை, வருத்தம் வரும் போது அணைத்து ஆறுதல் சொல்ல ஒரு துணை கட்டாயம் வேண்டும். அதனால் எலிசாவுடன் சிமித் வாழ்ந்த வாழ்க்கையோ மேரியின் முன்னாள் வாழ்க்கையோ பொய்யானது அல்ல. அதனை அவர்களின் பிள்ளைகள் புரிந்து கொண்டார்கள். மனிதன் இந்த உலகில் வாழ்வது ஒரு முறை தான்.
இத்துடன் கதை முடியவில்லை. நம் தாயகத்தில் எனக்குத் தெரிந்த ஒருவரின் மனைவி அவருக்கு ஐம்பது வயது ஆகும் போது இறந்துவிட்டா. இரண்டு வருடங்களின் பின் அவர் நண்பர்களின் வற்புறுத்தலால் மறுமணம் செய்ய ஆயத்தமானார். அதனை அறிந்த அவரது மகனும் மருமகனும் இந்த வயதில் இவருக்கென்ன மறுமணம் என்று போர்க்கொடி எழுப்பி நிகழ்வைத் தடுத்து நிறுத்தி விட்டனர்.
அவர்கள் தங்கள் தங்கள் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்கின்றனர். பாவம் அந்த மனுசன் எண்பதாவது வயது வரை தானே சமைத்து, தனியாகவே வாழ்ந்தார். வாழ்வது ஒரு முறை தான் என்பதைப்புரியாத எம் தாயக மக்கள்.
நிறைவு…
பத்மநாபன் மகாலிங்கம்